Friday, October 17, 2008

சந்திரன்

சந்திரன் சுழன்று வருவதைப்பார்
தண்ணொளி இன்றித் திரிவதைப் பார்
அந்தரம் அங்கே உயிர்க்காற்று
ஒன்றும் இல்லை சூனியம்தான்.

எரிமலை வாய்கள் பரந்திருக்கு
எங்கும் தூசி படிந்திருக்கு
எரிக்கும் வெப்பம் பகற்போதில்
எலும்பை உறைக்கும் குளிரிரவில்.

சூரியன் ஒளிபட்டு ஒளிர்கிறது
சுடராய் தண்ணொளி படர்கிறது
காரியம் புவியீர்பைச் செய்கிறது
கடலில் வற்றுபெருக் குண்டாகிறது

ஆம்ஸ்ரோங் காலடி பதித்துள்ளார்
காற்றும் கரைக்காத் தடமுண்டு
நாம்போய் குடிமனை கட்டிடுவோம்
நலமாய் வாழும் காலம்வரும்.

Monday, October 13, 2008

எனது முகவுரை.

எனது சிறுகதைகளைப் படித்த ஒரு அன்பர் 'நீங்கள் ஒரு மரபுக்கவிஞர். ஏன் சிறுகதைகளை எழுதி வீணாக்குகிறீர்கள்.' என்று எழுதினார். அவர் என்மேல் கொண்ட கரிசனையில் எழுதினாரா? அல்லது எழுதவேண்டாம் என்று எழுதினாரா? எனக்கு விளங்கவில்லை. ஆனால் 'ஏன் அழுதார்' என்ற எனது சிறுகதையைப் படித்த பிரபல சிறுகதை எழுத்தாளர்; திரு.அ.ஜேசுராஜா அவர்கள்; நான் கண்டியில் இருந்தபோது எனது விலாசத்தைத் தேடிப்பிடித்து வந்து என்னைப் பாராட்டி எழுதும்படி கூறினார். கவிதையைப் படிப்பவர்கள் குறைந்து கொண்டு வருகிறார்கள். திரு.அ.ஜேசுராஜா போன்றோர் இருக்கிறார்கள் என்ற மனோதிடத்தில் சிறுகதைகளை எழுதுகிறேன். பல சிறுகதைகள் பரிசுகளையும் பெற்றுள்ளன. பரிசுகள் பெறுபவை யாவும் நல்ல தரமான கதைகள் என்று நான் சொல்ல வரவில்லை.

இலங்கைத் தமிழருக்கென்று ஒரு இலக்கிய வரலாறு இருக்கிறதா? நாம் இதுவரை காலமும் இந்திய இலக்கிய வரலாற்றையே இலங்கைத் தமிழரின் வரலாறு என்று போற்றி வந்த மாயையை அண்மைக்கால தமிழக அரசின் அரசியல் நிலை உடைத்தெறிந்து விட்டது. இனியும் இந்திய இலக்கிய வரலாற்றை இலங்கைத் தமிழரின் இலக்கிய வரலாறாகக் கொள்ளும் மாயையை விடுத்து இலங்கைத் தமிழருக்கும் ஒரு பாரம்பரிய இலக்கிய வரலாறு இருக்கிறது என்பதை உறுதியாக்க விழித்தெழவேண்டும். பல்கலைக்கழகங்கள் இதனை ஒரு விரதமாகக் கொண்டுழைக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கெனத் தனியான இலக்கிய வரலாற்றை உருவாக்க வேண்டும். இலங்கையிலேயே இந்தியத் தமிழர்கள் என்று நாம் வேற்றுமை காட்டும்போது, இந்தியாவில் நம்மை இலங்கை அகதிகள் என்று அவர்கள் வேறுபடுத்தி வைப்பதில் தவறில்லை. நாங்கள் இலங்கைத் தமிழர்கள்தான்.
உலகம் தோன்றிய காலத்தில் ஒரேதிணிவாக இருந்த நிலப்பரப்பு காலகதியில் இன்று உள்ளநிலையில் இருப்பதற்கான புதிரை கண்டநகர்வுக் கொள்கையும், ஆய்வுகளும் விளக்குகின்றன. உண்மையில் இலங்கையில் இருந்தே இந்தியாவுக்கும் ஏனைய நிலப்பரப்புக்குளுக்கும் மக்கள் புலம் பெயர்ந்தார்கள். அதுதான் உண்மை. இன்றைய இந்தியாவிலும், அதற்கப்பாலும் வாழ்கின்ற மக்கள் நமது இலங்கையிலிருந்து அதாவது குமரிக்கண்டத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள்தான். நாம் இந்தியாவில் இருந்து வந்தவர்களல்ல. இலங்கையில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் சந்ததியினர். இதனை ஆய்வாளர்கள் நடுநிலையிருந்து ஆய்ந்தறிய வேண்டும். இந்திய ஆய்வாளர்கள் தமது வரலாற்றை எழுதிவைத்தார்கள். புராண, இதிகாசக் கதைகளைப் பதிவு செய்து மகாவம்சம் எழுதப்பட்டுள்ளது. பாளி மொழியில் எழுதப்பெற்ற மகாவம்சம் ஒரு வரலாற்று நூலல்ல. கிரேக்க நாட்டு இதிகாசங்களையும், இந்திய இதிகாசங்களையும் படித்தவர்களுக்கு மகாவம்சத்தில் கூறியுள்ள அம்சங்கள் புரியும். ஹம்சன் கதையோடு பாண்டு கபாயன் கதை ஒத்திருப்பதை அவதானிக்கலாம். யூலிசஸ் கதையோடு விஜயனின் கதை ஒத்துப் போவதை அவதானிக்கலாம். இதற்குரிய காரணங்கள் என்ன? ஆதி மனிதர்கள் ஒருநிலத்திணிவில் இருந்து படிப்படியாகப் பல்வேறு காரணங்களால் பிரிந்து புலம் பெயர்ந்துள்ளார்கள். பாளி மொழியில் பல இலக்கிய வடிவங்கள் இருந்தன. சமஸ்கிருத மொழியிலும், லத்தீன் மொழிகளிலும் பல இலக்கிய வடிவங்கள் இருந்தன. அம்மொழிகள் வழக்கொழிந்து விட்டன. ஆனால் அந்த மொழிகள் சிறந்து விளங்கியமையினால்தான் அவற்றின் கருவூலங்கள் இன்றைய அனைத்து மொழிகளும் உள்வாங்கி வளம்பெற்றன.


ஒவ்வொருவரும் தமது மொழிதான் சிறந்தது எனக் கூக்குரல் எழுப்புகின்றார்கள். எவராவது தமது தாயை வெறுத்தொதுக்குவார்களா? தமது தாய்க்குச் சிறந்த இடம் ஒதுக்குவார்கள். அதேபோல்தான் ஒவ்வொருவருக்கும் அவரவர் தாய்மொழி சிறப்பானது. இதனை நாம் மனதில் கொள்ளவேண்டும். நாம் போற்றி 'நமது இலக்கியம்' என்று படிக்கின்ற இந்திய இலக்கியங்கள் இலங்கைத் தமிழர்களை ஓரங்கட்டுவதை இன்னமும் நாம் உணரவில்லை. ஈழத்தமிழர்கள் தனித்துவமுடையவர்கள். அவர்களுக்கான 'இலக்கிய வரலாறு' அவசியம் தேவை. தொடர்ந்தும் இந்தியர்களது இலக்கிய வடிவங்கள் ஈழத்தவர்களுக்குத் Nவையில்லை. ஏனெனில் ஈழத்தமிழர் நிரந்தரமானவர்கள். துணிவுடன் போராடவல்லவர்கள்.

3. செவ்வந்திமாலைப் பொழுது.

அவர்தான்; சோமசுந்தரம்பிள்ளை. அவர் ஒரு ஆசிரியர் மட்டுமல்ல பெரும் புலவருமாவார். 'எல்.பி திறி;' என அழைக்கப்படும் லிங்கபுரம் பாடசாலையில் கடந்த இரு வருடங்களாகக் கடமையாற்றி வருகிறார். அது கிளிவெட்டிப் பிரதேசத்தில் உள்ள ஒரு கூடியேற்றப் பிரதேசம். போக்கு வரத்து வசதிகளற்ற மிகக்கஸ்டமான பகுதி. வெள்ளிக்கிழமை நாட்களில் சமாளித்துக் காலை பத்துமணி பேருந்தைப் பிடித்தால் மாலை ஐந்து மணிக்கு மட்டக்களப்பில் உள்ள களுவாஞ்சிக்குடியை அடையலாம். அங்கிருந்து எருவில், குறுமண்வெளி ஊடாக பொடிநடை போட்டால் மண்டூர் துறையை அடையலாம். மட்டக்களப்பு வாவி நிலத்திணிவை இருகூறுகளாக்கி நீண்டு படுத்திருக்கும். அந்த வாவியில் தோணிகட்டிப் படகுச்சவாரி போவது உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அனுபவம் கிடைக்கும். வாவிக் கரைகள் தோறும் கிராமங்கள் மெருகூட்டும். ஆவினமும் மேதிகளும் தலையாட்டும். வாவியின் இருகரைகளையும் இணைத்துக் குறுக்காகத் தோணிகள் பயணம் போகும். சோமசுந்தரம்பிள்ளை இந்த வாரம் வியாழக்கிழமையே புறப்பட்டு விட்டார். புதன்கிழமை கிடைத்த செய்தி அவரை உலுக்கி விட்டிருந்தது. அவரது இல்லத்தரசி பவளம்தான் அந்தச் செய்தியை அனுப்பியிருந்தார். புலவருக்கு யோசனை தலைக்கேறி விட்டது. ஒரு தாளை எடுத்துத் தனது நிலைமையை விளக்கிச் சொந்த ஊருக்கு இடமாற்றம் தரும்படி கல்வித் திணைக்களத்துக்கு மனுவினை எழுதித் தபாலில் சேர்த்தும் விட்டார். ஊர்மனை உறங்கிக் கொண்டிருந்தது. பழைய மாணவனின் துணையோடு சைக்கிளில் கிளிவெட்டித் துறையை அடைந்தார். கூட்டிவந்தவரை உபசரித்து அனுப்பிவிட்டு பயணத்துக்கு ஆயத்தமானார். ஆனால் வஸ்வண்டியைத்தான் காணவில்லை. கிளிவெட்;டி, வெருகல், பனிச்சங்கேணி, குறுமண்வெளி துறைகளைத் தாண்டி மண்டூர் செல்லவேண்டும். அதிகாலையில் புறப்பட்ட பயணம் இது. வஸ் வந்ததும் ஏறிக்கொண்டார். வஸ் ஓடுவதற்கேற்ப அவரது கற்பனைத் தேரும் ஓடியது. கண்களை மூடியபடியே அந்த உலகத்தில் உலா வந்தார். இடையிடையே கற்பனை கலையும். வுpழித்துக் கொள்வார். சிலநேரங்களில் பவளத்தின் கடிதச் செய்தி பூதாகரமாக உருவெடுக்கும். சற்று நேரத்தில் இதெல்லாம் பெரிய பிரச்சினையா? ஏன்று மங்கித்தூசாகும். குண்களை மூடி மண்டூர் முருகனை மனதிருத்தினார். 'மண்டூர் முருகா! ஒருக்காக் கண்திறந்து பாரையா. ஏனக்கு யாரிருக்கார். உன்னைத்தானே நம்பியிருக்கிறன். நாசமறுவான் இப்படி இடமாற்றத்தத் தந்து கஸ்டப்பட வச்சுப் போட்டான். அவள் அங்க எவ்வளவு பாடு படுவாளோ தெரியாது.' வழிநெடுகிலும் மண்டூர் முருகனையே நினைந்து நெக்குருகி வேண்டுதல் செய்து கொண்டுதான் வந்தார். தனது கஸ்டத்திலும் பிறரைத் திட்டித் தீர்க்கும்போது பயன்படுத்தும் சொற்களையும் எண்ணிப்பார்த்தார். ' 'நாசமறுவான்' என்பது நாசம் 10 அறு 10 ஆன் ஸ்ரீ அழிவு இல்லாதவன் அல்லது நாசத்தை இல்லாதாக்குபவன் என்றல்லவா பொருள். நான் அவனைத் திட்டினேனா அல்லது வாழ்த்தினேனா'? தனக்குள் சிரித்துக் கொண்டார். பிறர் நமக்குத் தீங்கு செய்தாலும் நாம் அவருக்குத் திருப்பி அதனைச் செய்யக் கூடாது. மனதினில் போராட்டம். ஒருவாறு மண்டூர் துறையடிக்கு வந்து சேர்ந்து விட்டார். துறையைக் கடக்க கோவிந்தனின் உதவி கிடைத்தது. அவன் புலவரை தனது தோணியில் ஏற்றிக் கரைசேர்த்துவிட்டான். துறையடி மாரியம்மனை ஒருக்காத் திரும்பிப் பார்த்து விட்டு 'நீயெல்லாம் ஓரு இடத்தில் இருக்க நான் மட்டும் அங்க இங்க என்று இழுபடுறன். நீ நல்லா இரு.' மனதில் முணுமுணுத்தபடி தோளிலும், கைகளிலும் சாமான் சட்டுக்களைத் தூக்கிப் போட்டுக்கொண்டார் மெதுவாக நடக்கத் தொடங்கினார். மனிதமனம் பொல்லாதது. துன்பம் சூழும்போது தனிமையில் தனக்கு வாயில் வந்தவாறு புலம்பும். இறைவனை முன்நிறுத்தி குற்றவாளிக் கூண்டில் ஏற்றி நீதி கேட்கும். விசித்திரமான மனம். பிரயாண அலுப்பு சுமையை அதிகமாக்கியது. மனிதன் தனிமையில் இருக்கும்போதுதான் உள்மனிதன் விழித்துக் கொள்கிறான். அந்த உள்மனிதன் உண்மைகளை அறிந்தவன். நிறைகுறைகளைச் சட்டிக் காட்டுபவன். புலவரைச சிந்திக்க வைத்துவிட்டான். 'நானும் பொறுமையாக இருந்திருக்க வேணும். அந்த அரசியல்வாதியிடம் மோதியிருக்கக் கூடாது. அரசியல் வாதி சொன்னதுபோல் ஒத்துப் போயிருந்தால் இந்நிலை வந்திராது, எப்படி ஒத்துப் போவது? அனியாயம் செய்யும் அரசில்வாதிக்குப் பக்கபலமாக இருப்பதைவிட விலகியிருப்பது நல்லது. அவருக்கு இப்போது அது நினைவில் தட்டியது. அந்த அரசியல்வாதியின் திட்டத்தை சின்னத்துரை சொன்னவிதம் அவருக்குப் பிடிக்கவில்லை;. 'புலவரையா! நம்மட தலைவர், உங்கள தன்ர பக்கம் வேலைசெய்யட்டாம். அவருக்காக எடுக்கிற விழாவில பாட்டும் எழுதித் பாடட்டாம். மேடையில் தன்னை ஆதரித்துப் பேசட்டாம். என்னை அதுக்காகத்தான் அனுப்பினவர்.' புட்டு வைத்தான். 'சின்னத்துரை ஒரு தலைவனைப் புகழ்வதில் தப்பில்லை. ஆனால் போலிகளை இந்தப் புலவன் புகழமாட்டான். சொல்லிப் போட்டன். நீ போ.' புலவர் கடுகடுத்தார். 'நான் நல்லதுக்குத்தான் சொன்னனான். பிறகு வரும் வில்லங்கத்துக்கு என்னைப் பிழைகூறக்கூடாது.' கூறியவாறே சின்னத்துரை மெதுவாக நழுவ முற்பட்டான். புலவர் ஆத்திரத்தில் ' தன்னைப் புகழச் சொல்பவன் தலைவனா? மக்களின் கஸடநஸ்டம் தெரியுமா அவருக்கு?. தொண்டு செய்பவன்தான் தலைவன். ஏன்னால் முடியாது. போய்ச் சொல். செய்யிறதைச் செய்யட்டும்' புலவர் கடுகடுத்தார். அதன் பலனை இன்று அனுபவிக்கிறார். 'நாடு கெட்டுப்போய்க் கிடக்கிறது. மனிதர்கள் ஆளையாள் கொன்றொழிக்கிறார்கள். இவர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? என் இந்த நிலை வந்தது? இதற்கு யார் பொறுப்பு.'? மனதினிலே எண்ணியவாறு நடந்தார். 'பிள்ளைகளை வலுக்கட்டாயமாக இழுத்துப் போறார்களாம். யுhர் இழுத்துப் போகிறார்கள்? எதற்காக இப்படிச் செய்கிறார்கள்? ஒன்றும் விளங்காத நிலையில் தடுமாறிப் போனார். எல்லாம் இந்தச் சுயநல அரசியல்வாதிகளின் சதிவேலை. செவ்வந்தி மாலைபொழுது அழகைச் சொரிந்து கொண்டிருந்தது. அந்த செவ்வந்தி மாலைப் பொழுதை அவரால் இரசிக்க முடியவில்லை. 'அழகை இரசிப்பதற்கும் மனதில் நிம்மதி வேண்டும். நிம்மதி என்பது அவரவர் மனதைப் பொறுத்ததுதானா? ஏனக்கு அழகாகத் தெரியும் பொருட்கள், காட்சிகள் மற்றவர்களுக்கு அழகாகத் தென்படுவதில்லை ஏன்?. ஒருவர் இரசிக்கும் காட்சியை வேறொருவர் இரசிக்கமாட்டார். என்ன வேடிக்கையான மனம்.' சோமசுந்தரம் மனதோடு உரையாடிக் கொண்டிருந்தார். கால்கள் நடந்து கொண்டிருந்தன. அவர் சிந்தனையில் ஆழ்ந்தாரென்றால் அவரையே அவர் மறந்து நடந்து கொண்டிருப்பார். கால்கள் போகவேண்டிய இடத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கும். பக்கத்தில் என்ன நடக்கிறது என்று அவருக்குத் தெரிவதில்லை. சிலநேரங்களில் இவரது நிலையைக் கண்டவர்கள் விசரன் என்று விலகிப் போவதுமுண்டு. புலவர் கற்பனையில் இறங்கினால் தன்னை மறந்து விடுவார். அவரது கண்கள் புருவ நெற்றிக்கூடாக நேர்பார்வையில் இருக்கும். எண்ணமெல்லாம் இழையோடிக் கொண்டிருக்கும். சொற்கூட்டம் சேர்ந்து கொள்ளும். பாவடிவில் பயணிக்கும். மெட்டெடுத்து வாய் முணுமுணுக்கும். அவர் ஒரு அற்புதப்பிறவி.


அப்பொழுதுதான் மண்டூர் கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை களைத்து வந்து சேர்ந்ததைக் கந்தவனத்தார் கண்டுகெண்டார். அவரது உடலை மூடியிருந்த வாலாமணி நனைந்திருந்தது. அவரை இப்பொழுதெல்லாம் அடிக்கடி மண்டூரில் காணமுடிவதில்லை. 'நல்ல மனிசன். ஏன் அவருக்கு இடமாற்றம் வந்தது?' கந்தவனத்தாரிடம் பலர் இப்படிக் கேட்டார்கள். 'நல்லதைக் கேட்டால், சொன்னால் அவன் பொல்லாதவன். கவிஞர் பொதுநலவாதி. பொதுமக்களுக்காகக் குரல் எழுப்பினார். நமது அரசியல்வாதிகளுக்கு பிடிக்கல்ல. அதுதான் அவருக்கு வந்த வினை'. கந்தவனத்தார் பெருமூச்சுடன் சொன்னார். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றுதான் புறப்பட்டார். ஆனால் பொருளாதாரக் கஸ்டம் அவருக்குச் சுமையாகியது. வீடும் பாடசாலையும் என்று வாழ்ந்தவருக்கு இடமாற்றம் வேதனையை அளித்தது. சம்பளத்தை எடுப்பார். மனைவி பவளத்தின் கையில் கொடுப்பார். அவ்வளவுதான். வீட்டில் நடப்பது அவருக்குத் தெரியாது. கந்தவனத்தாருக்குப் புலவரின் குணாதிசயங்கள் அத்துப்படி. புலவர் முன்னால் போய்க் கொண்டிருந்தார். பின்னால் கந்தவனத்தார் விரைந்து நடந்தார். 'என்ன புலவரையா கடும் யோசனை?' குரல் கேட்டுத் தன்னைச் சுதாகரித்துக் கொண்ட மண்டூர்ப் புலவர் சோமசுந்தரம் குரல் வந்த பக்கம் திரும்பிப் பார்த்தார். அவர் பக்கத்தில் கந்தவனத்தார் புன்னகையோடு நின்றார்.


'வாங்க ..கந்தவனம்.. இப்பதான் வாறன்' ஓரு புன்னகையை வீசியெறிந்து பேசினார். அவரது முகத்தில் சோர்வு தெரியவில்லை. சொந்தக்காரரைக் காண்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்தது. தனது சொந்த ஊரில் கால்பட்டதும் சுகம் கூடிக்கொண்டது. ஒருவித பெருமிதத்தோடு நடந்தார். கந்தவனத்தார் புலவரின் பொருட்களின் சுமையைப் பகிர்ந்து கொண்டார். ஊர்விசயங்கள் புரண்டு துள்ளின. பார்க்கும் இடமெல்லாம் இப்போது அற்புதமாகத் தெரிந்தது. ஆனாலும் புலவரது மனதினிலே இனந்தெரியாத வேதனை முள் தைப்பதைப்போல் குத்திக் கொண்டிருந்தது. அந்த வலியினால் ஏற்பட்ட உளைச்சல் எரிச்சலையும் கூட்டியது. நிம்மதியாக வாழ்ந்த மக்களது மனங்கள் துயரக்கடலில் மூழ்கியுள்ளதை நிநைந்து வெந்து கொண்டார். 'புலவரையா எப்படி இப்ப வேலைபார்க்கிற இடம்?. நம்மட ஊரைப்போல இருக்குமா?' 'கந்தவனம்; ..அந்த ஊர் நல்லதுதான். நல்ல சனங்கள். ஆனாலும் நம்மட ஊர் நமக்குச் சொர்க்கம்தான். சொந்த ஊரைப்போல ஒன்றும் சுகம்தராது. அங்க உல்லாசமாக இருந்தாலும், ஒரு தனிமை வாட்டும். நம்மட ஊர்ல காலைநீட்டிக் கொண்டிருந்தாலே போதும். சுகம் சுண்டும். அந்தச் சுகம் எங்கும் கிடைக்காது. ஆனால் அது இப்ப தொலைஞ்சு போச்சுது போலக்கிடக்குது.' புலவர் அடுக்கிக் கொண்டு போனார். கந்தவனத்தார் மட்டக்களப்பைத் தவிர வேறு ஊர்களுக்குப் போனது கிடையாது. அரசாங்க உத்தியோகம் பார்க்கிறவர்கள் இடமாற்றம் பெற்றுப் பல ஊர்களில் வாழக்கூடிய சந்தர்ப்பங்களைப் பெற்றுக் கொள்வார்கள். நல்ல அனுபவங்களைப் பெற்றும் கொள்வார்கள். கந்தவனத்தார் போன்றவர்கள் சொந்த ஊரிலேயே கிடப்பவர்கள். கிணற்றுத் தவளைகளைப் போல் ஊருக்குள்ளேயே கிடப்பதைத் தவிர வேறு அனுபவம் கிடக்கச் சந்தர்ப்பம் இல்லை. அவருக்குப் பல ஊர்களைப்பற்றி அறிய ஆசைதான். ஏப்படிப் போய்ப்பார்ப்பது. பொருளாதாரம் இடம் கொடுக்காது. அது சாத்தியப் பட்டும்வராது.


'என்டாலும் புலவரையா நீங்க கொடுத்து வைத்தவர்தான். நாலு இடங்களையும் மனிசரையும் பார்த்துப் பழகச் சந்தர்ப்பம் கிடைச்சிருக்கல்லவா?' நடந்து கொண்டே கந்தவனத்தார் தன் உள்ளக் கிடக்கையை வெளிக்காட்டினார். புலவரின் உள்ளம் அவரிடம் இல்லை. அது பறந்தோடியது. ஆந்த ஒரு வினாடிப் பொழுதில் அந்தக் கணத்தைக் கண்டார். பழையதை அசைபோடுவதில் ஒரு புதுமை இருக்கும். சுகமும் இருக்கும். புலவருக்கு தான் கடமையாற்றும் பிரதேசத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் இருப்பதை நன்றியோடு நினைவு கூர்ந்தார். நவராத்திரி தொடங்கினால் மூதூர் பிரதேசம் குதூகலிக்கும். பாடசலைகளும் கோவில்களும் விழாக்கோலம் பூணும். மாலைதொடக்கம் நள்ளிரவு வரை கலைநிகழ்சிச்pகள் நடைபெறும். கவிதை அரங்குகளுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படும். மல்லிகைத் தீவு அற்புதமான மருதநிலக் கிராமம். செந்நெல் வயல்சூழ்ந்து விளைந்து கிடக்கும். தென்னஞ்சோலை பாளைவெடித்துச் சிரிக்கும். மாலையானால் மைனாக்கனின் குதூகலிப்பு. கட்டிப்புரண்டு கதைபேசி மகிழும் காட்சி மனதை ஈர்க்கும். பார்க்கும் பக்கமெல்லாம் பசுமை போர்த்திருக்கும். மல்லிகைத்தீவு மகாவித்தியாலயம் தன்னை அலங்கரித்து மக்களை ஈர்த்துக் கொண்டிருந்தது. மண்டபம் நிறைந்து மக்கள் வழிந்து கொண்டிருந்தனர். 'கவிதை அரங்கு எப்போது? கவிஞர்கள் வந்து விட்டார்களா'? கேள்விமேல் கேள்வி கேட்டுக் கவிஞர்களின் வருகைக்காக மக்கள் காத்துக்கொண்டிருந்தனர். வரிசையாகக் கவிஞர்கள் சைக்கிள் சவாரி செய்தவண்ணம் வந்து சேர்ந்தார்கள். மண்டூர்கவிஞரும் எடுப்பாக நின்றார். இது அவர்களுக்கு எத்தனையாவது சுற்று.? கிராமங்கள் தோறும் வாணிவிழா கவிதை அரங்குகள் களைகட்டும். பலகிராமங்களில் கவிதையரங்குகளில் பங்கு கொண்டு விட்டுக் களைத்து வந்திருந்தார்கள். தாமரைத்தீவானின் தலைமையில் கவிதையரங்கு. ஆலையூரன், ஈச்சையூர்தவா,தமிழ்பித்தன், பின்னால் புலவர் இசையோடு பாடினார்.


தோப்பூரில் வேலை செய்யும் சோமசுந்தரம் பிள்ளை;- உனக்கு சொந்தக்காரர் இல்லை, இங்கு துன்பம் கோடி தொல்லை ஆப்பு வைத்தான் ஒருவன் அதில் அகப்பட்டவன் நாளைஆப்பு உடைத்து வருவான் உன் அகந்தை உடைத்து வெல்வான்.
கைதட்டலும் சிரிப்பும் வானைப் பிளந்தது. புலவர் இறுதியாக இசையோடு பாடினார். தோடர்ந்து பாடிய கேணிப்பித்தன்
தோப்பூரில் வேலை செய்யும் சோமசுந்தரம் பிள்ளை;- உனக்கு சொந்தக்காரர் கொள்ளை, இங்கு துன்பம் கோடி இல்லை காப்பவிழ்ந்த பூதான் நீ காலமெல்லாம் வாழ்வாய்காலம் பதில் சொல்லும் கவலை உனக்கு இல்லை.
இப்படிப் பாடினார். மக்கள் ஆரவாரித்து மகிழ்ந்ததை புலவர் மனநிறைவோடு எண்ணிக் கொண்டார். மனிதமனம் அலைபாயும் தன்மையுடையது. நிறம் மாறும் ஓணாண்போல் நிமிடத்து நிமிடம் மனம் மாறும். புலவரும் அப்படித்தான். சட்டென்று விசயத்துக்கு வந்துவிட்டார். 'இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சைதான் கந்தவனம்.' புலவர் தனது மன உளைச்சலை பெருமூச்சோடு வெளித்தள்ளினார். நடந்து கொண்டே தான் பிறந்து வளர்ந்த ஊரின் அழகையும் பெருமையையும் வியந்து மெய்மறந்து நெக்குருகினார்.
அழகான அந்த வாகைமரம் காற்றினை ஏந்தி அரவணைத்துச் சலசலத்துத் தாளம்போட்டுக் கொண்டிருந்தது. வாகை மரங்கள் ஊடாக மட்டக்களப்பு வாவியின் பரந்த அழகு எட்டிப்பார்க்கிறது. அந்த வாவியில்தான் சித்திரை முழுநிலவின் ஒளியில் நீரரமகளிர இன்னிசை பாடிவருவதாக ஐதீகம். விபுலானந்த அடிகள் அந்த இசையைக் கேட்டு யாழ்நூலை எழுதினார். அந்த வாவி மட்டக்களப்பை இருகூறுகளாக்கிப் பரந்து நீண்டு கிடக்கிறது. எழுவான்கரையில் எம்பிய காற்று, படுவான்கரையை நோக்கி வீசுகின்றது. யாழ்நூலில் வித்தகன் விபுலானந்தரின் கற்பனை அற்புதம். பாடும் மீன்களான நீரரமகளிர் மாலையில், நீலவானில் நிலவு பவனிவரும் வேளையில், மலைவு கொண்டு பாடி ஆடி மட்டக்களப்பு வாவியில் உலா வரும் காட்சியை அற்புதமாகக் காட்டியுள்ளார். பாடலுக்கேற்ற இசையை அள்ளிய காற்று வாவியின் மெலிதான அலைகள் ஊடாகப் பரப்புகிறது. மயங்கிய மாலைப் பொழுதில் மனங்கள் துள்ளி ஆடுகின்றன.
நீல வானிலே நிலவு வீசவேமாலை வேளையே மலைவு கொள்ளுவோம்சால நாடியே சலதி நீருளேபாலை பாடியே பலரொடாடுவோம்.
சுவாமி விபுலானந்தரின் இந்தப்பாடலை மண்டூர்ப் புலவர் சோமசுந்தரம் வாய்விட்டுப்பாடி மகிழ்வார். பாடி மற்றவர்களையும் மகிழ்விப்பார். மண்டூர் புலவர் சோமசுந்தரம்பிள்ளை ஒரு வித்தியாசமான மனிதர். அவரது கொடுப்புள் ஒரு புன்னகை ஒளிந்து கொண்டிருக்கும். புருவங்களைச் சுருக்கி இனிமையாகப் பேசுவார். வெள்ளை வேட்டி சட்டையுடன் கழுத்தில் மாலையாக சால்வை அலங்கரிக்கும். அகம்பாவமற்ற உயர்ந்த தோற்றத்தோடு நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமாக காட்சி தருவார். அவரது கற்பித்தல் முறையும் வித்தியாசமானது. அவரே பாடப் புத்தகம்தான். வகுப்பறையில் அவர் பாடம் தொடங்கினால் பக்கத்து வகுப்பறை மாணவர்களது மனங்களும் கண்களும் அவர் பக்கம் இருக்கும். செயல்மூலம் கற்பிக்கும் திறங்கொண்டவர். மாணவர்களது அபிமானம் பெற்ற நல்லதொரு ஆசிரியர். அலைகள் ஒன்றன்பின் ஒன்றாக மண்டூர்க் கரையில் மோதி உடைகின்றன. மண்டூர், வாவியின் அலைகளை அணைத்து முத்தமிட்டவாறு நீண்டு விரிந்து படுத்திருக்கிறது. வெயிலின் வெப்பத்தினால் ஆவியாக்கம் நடைபெற்று வளி குளிரைத்தடவிக் குதூகலிக்கிறது. வாவி நீரில் குளித்த காற்று புதுமையைக் கலந்து மரக்கொப்புகளை உலுப்புகிறது. அந்த உலுப்புதலில் அசைவாக்கம் பிறக்கிறது. அந்த அசைவில் ஒரு நளினம் சுழன்றாடியது. காற்று, அசைவினூடாக இன்னிசையைப் பரப்பி இங்கிதத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. பெரியதொரு யானை அசைந்தாடுவதுபோல் வாகைமரம் காட்சியாகியது. அதன் அடிமரம் சரிந்து வளைந்து, இடையில் கிளைவிட்டு வளைந்து சடைத்துச் சாய்ந்திருந்தது. அதன் வேர்கள் நிலத்தின் மேல் பெரிதாய் விரிந்து புடைத்து இருக்கைகளாக மேடையமைத்திருந்தன. அப்படியான வாகைமரங்கள் மூன்று நான்கு நின்று நிழல்வடித்துக் கொண்டிருந்தன. வருவோர் போவோருக்கு இளைப்பாற்றும் பணியை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். இந்த மரங்களுக்கு இப்படியான கட்டளையை இட்டது யார்?. இடையிடையே வம்மி மரங்களின் பிரசன்னம். வம்மிப்பூக்களில் இருந்து பரவும் நறுமணம் சொர்க்கத்தை நினைவூட்டும். இந்தப் பூக்களில் இருந்து எப்படி இந்த வாசனை வருகிறது? கந்தவனத்தார் ஒரு வம்மிப்பூவைக் கையில் ஏந்தி அதனைத் தன் கைகளுள் திணித்து அதன் மென்மையை உணரத்தொடங்கினார்;. கந்தவனத்தாரின்; நண்பகல் அந்த வாகைமரத்தடியில்தான் கழியும். சீனித்தம்பியும் அங்குதான் வருவார். அவரோடு பலர் குழுமுவார்கள். கூட்டங்கூட்டமாகப் பரந்து இருப்பார்கள். களைப்பாற மட்டும் வருவதில்லை. வேலோடு விளையாடும் முருகனின் திருவிளையாடல்களைப் பேசி மகிழ்வதற்குமாகவும் ஒன்று கூடுவார்கள். சூரனை வதம்செய்ய கந்தன் ஏவிய வேலினது அகோரம் தணியவில்லையாம். அது பலகிளைகளாகப் பிரிந்து பல இடங்களில் தங்கியதாக மக்கள் கூறுகின்றனர். ஒரு வேல் மண்டூரின் வாவியோரமாக இருந்த தில்லைமர வேரில் தங்கியதாக இன்றும் மக்கள் நம்புகின்றார்கள். அந்த வேலினைக் கண்ட மக்கள் அப்படியே கோயிலமைத்து வணங்கி வருவதாக வரலாறு. முருகனின் புகழ்பாடும் மண்டூர் பெருமைமிக்கது.


அதர்மத்தை விலக்கித் தர்மத்தை நிலைநாட்ட அவ்வப்போது அவதாரங்கள் தோன்றும். சூரனின் பிடியில் சிக்கித் தவித்த ஆன்மாக்களுக்கு விடுதலையழித்து விண்ணரசைத் தோற்றுவித்ததாக இதிகாசங்களும், புராணங்களும் கூறுகின்றன. அவற்றையெல்லாம் அசைபோட்டவாறு ஒரு கூட்டம் கூடிக்குதூகலிக்கும். மதியம் பன்னிரெண்டு மணி. மண்டுர் முருகனின் கோயில்மணி ஒலிக்கிறது. கருவறைக் கதவின் திரையில் ஆறுமுகமும், பன்னிரு கைகளும். பக்கத்தில் வள்ளி தெய்வயானை சமேதரராய் முருகனின் அழகுக் காட்சி. அற்புதமாக அழகு வண்ணத்தில் ஓவியமாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. வண்ணக்கர் குணசுந்தரனார் பூசகருக்கும் மற்றும் தொண்டர்களுக்கு வேண்டிய ஆணைகளைப் பிறப்பித்தவாறு விசாலமாகத் தோன்றுகிறார். சாதாரண மனிதனுக்கு அது அற்புதமான காட்சியாகத் தெரியும். ஆனால் தத்துவ ஞானிகளுக்கு பரப்பிரமத்தின் அற்புதப்பொருள் தென்படும். பாரினில் ஐந்தாய் பரந்த நாயகன். நீரினில் நான்காய்த் திகழ்ந்த தத்துவன். தீயினில் மூன்றாய் மூழ்கிய நுண்ணியன். வுளியினில் இரண்டாய் வலம்வரும் புண்ணியன். வெளியிடை ஒன்றாய் வியாபித்த சோதிவானவனின் திருவிளையாடல் அனுபவமாகும். தீபாராதனையுடன் பூசை தொடங்குகிறது. கற்புகனார் கந்தையா பயபக்தியில் மூழ்கி முருகனில் ஆழ்ந்திருக்கிறார். குழுமியிருந்த ஆண்களின் தோளில் கிடந்த சால்வைகள் இடுப்பில் தஞ்சமாகின்றன. கைகள் தலைமேல் வைத்துக் கண்ணீர் அரும்பித் ததும்ப, மனங்களை முருகனின் சந்நிதானத்தில் படைத்து சாஸ்டாங்கமாக விழுந்து 'முருகா.. மண்டுர் கந்தா..குகனே..கதிர்வேலவனே.. பட்ட துன்பங்கள் போதும். இந்த நாட்டில் சமாதானத்தையும் சாந்தியையும் காட்டு. யுத்தம் இல்லாத சூழலை ஏற்படுத்து. மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையைக் காட்டு.' கந்தவனத்தாரின் கைகள் அகல விரிந்து தலைமேல் குவிந்து இரக்கின்றன. தாய்மார்கள் தமது பிள்ளைகளை 'யுத்தச் சுனாமியில் இருந்து காப்பாற்று.' இரந்து நிற்கிறார்கள். தனக்காக வேண்டுதலை அங்கு காணவில்லை. உலக மக்களின் துயரங்களைப் போக்க ஆராதனை நடக்கின்றது. காட்டுத்தர்பார் நடக்கும் நாட்டில் பிணமுண்ணும் பேய்களைத்தான் காணமுடியும். தவித்த முயலடிக்கும் சந்தர்ப்ப வாதிகளைத்தான் சந்திக்க முடியும். சாய்ந்தால் சாய்கிற பக்கம் சாயும் மானிடர்களைத்தான் பார்க்கக் கூடும். இறைவன் இருக்கின்றானா? இறைவன் கல்லா? வெறும் கற்பனையா? இது புரியாத புதிர்தான். கணீர்;; குரல் ஒன்று ஓங்கி ஒலிக்கிறது. அருணகிரியாரின் அற்புதப் பாடல் பரவுகிறது. கண்களில் கண்ணீர் மல்க மண்டுர் கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை உடல்சிலிர்க்கப் பாடுகிறார். அவரது குரல்வளம் அற்புதாக ஒலிக்கிறது. பாடலின் ஒவ்வொரு சொல்லும் மிகத்தெளிவாக, அர்த்தபுஷ்டியாக இதயங்களில் படிகின்றன. பாடலோடு ஒன்றித்து அனுபவித்து ஒலிநயத்தோடு பாடல் செவிகளில் புகுந்து மெய்சிலிர்க்க வைக்கிறது. கேட்டுக் கிறங்கிக் கல்லாக மக்கள் திரண்டு நிற்கிறார்கள். அவர்களது மனங்கள் நீராய் உருகி ஓடுகிறது. ஒருபுறம் பெண்கள் கூப்பிய கைகளோடு விழிகள் மூடி, மனங்களைக் கந்தன் தாளில் படியவைத்து மெய்மறந்து நிற்கிறார்கள். ஆண்கள் தலைமேல் கைகள் மொட்டிக்க 'கந்தா' என நா வறள அரற்றி நிற்கிறார்கள். பாடல் முடிய அவர் தோப்பூரில் கவிதை அரங்குகளில் அவ்வப்போது நகைச்சுவைக்காகப் பாடும் அந்தப் பாடலைச் சற்று மாற்றி முணுமுணுக்கத் தவறவில்லை.


தோப்பூரில் வேலை செய்யும் சோமசுந்தரம் பிள்ளை உனக்கு ஆப்பு வெச்ச தாரு அதனை அகற்றி வைப்பவர் யாரு. அவரது வேண்டுகோள் முடிந்தது. பக்தர்கள் பரவசமாகி நிற்கிறார்கள். எங்கிருந்தோ அந்தத் தோகை மயில் பறந்து வருகிறது. இரண்டு வரிசையாக நிற்கும் மக்கள் மத்தியில் புகுந்து வளைந்து நடக்கிறது. மேளவாத்தியம் முழங்குகிறது. அதற்கேற்ப மயிலின் அசைவுகள் பார்ப்போரைக் கிறங்கடிக்கின்றன. அற்புதமான காட்சியாகத் தெரிகிறது. இந்த மயில் கோயிலுக்கு வெளியேதான் திரியும். கோயிலைச் சுற்றி வலம் வரும். கோயில் கோபுரத்தில் நின்று அகவும். புறந்து மரக்கிளையில் தாவும். பக்தர்கள் கொடுக்கும் உணவுகளைக் கொத்தி உண்ணும். ஆனால் இன்று வித்தியாசமாக கோயில் உள்ளே பூசை நேரத்தில் புகுந்துள்ளது. ஒருநடனமாது போன்று அசைந்து நடந்து புலவர்முன் நின்றது. அங்கிருந்து நேரே பறந்து வெளியில் குதித்தது. அது பறந்த விசையில் காற்று எம்பி உதைத்தது. ஆச்சரியத்தோடு பக்தர்கள்'முருகா' என்று அரற்றினார்கள். பூசை முடிந்து வெளியில் வந்தார்கள். 'புலவரையா..ஏதோ நன்மை நடக்கப்போகிறது. அது உங்களுக்குத்தான். இருந்து பாருங்கள். அடுத்த கிழமை நீங்கள் மண்டூருக்கு மாற்றமலாகி வந்து விடுவீர்கள்' கந்தவனத்தார் கம்பீரமாகச் சொன்னார். 'நீங்க சொன்னது பலிக்கட்டும்'. வழமையான புன்சிரிப்போடுச் சொல்லி வீட்டுக்கு நடைபோட்டார்.


'இரண்டுநாள் லீவு போட்டு நில்லுங்க. இந்தச்சச்சரவுகள முடிச்சுப் போட்டுப்போனால் நல்லதுதானே'. பவளம் சொல்வதிலும் ஞாயத்தைக் கண்டார். 'சரி... நான் சொல்லிப்போட்டுத்தான் வந்தனான். புதன்கிழமை போவம். அதுக்குள்ள காரியங்கள பார்த்து முடிச்சுpட்டுப் போடுவம்.' புலவரின் பதிலைக் கேட்டதும் பவளத்துக்குச் சந்தோசம். லீவைப் பற்றிக் கதையெடுத்தாலே பொத்திக்கொண்டு கோபம் வரும். இன்று புலவரின் நடத்தையில் பவளம் மாற்றத்தைக் கண்டு கொண்டார். ஊரின் நிலவரங்களை அறியவேணும். வீணான வம்புகளில் மாட்டுப்படக் கூடாது. சைக்கிளை எடுத்துக் கொண்டு உலா வந்தார். பவளம் கடிதத்தில் குறிப்பிட்டது போல் அவ்வளவு பிரச்சினைகள் இருந்ததாக அவருக்குத் தெரியவில்லை. ஏதோ அங்கொண்று இற்கொண்று நடந்திருக்கு. அவை தவிர்க்கமுடியாதவை எனத் தெரிந்து கொண்டார். எனினும் பவளத்தின் உடல்நிலையில் மாற்றத்தைக் கண்டார். 'பவளம் ஒருக்கால் கல்முனைக்கு அல்லது மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்குப் போய் காட்டுவோமா'? ஆதரவோடு கேட்டார். 'இதுக்கெல்லாம் ஆஸ்பத்திரிக்குப் போவனேன்.? நம்மட ஊர் ஆஸ்பத்திரில் காட்டி மருந்தெடுப்போம். சாதாரண காய்ச்சல்தானே? அது மாறிடும்.' பவளம் மறுத்துவிட்டாள். அவளுக்கு நாட்டு நிலவரத்தை எண்ணியே கவலையாயிருந்தது. இளம்பிள்ளைகளை வீடுகளில் வைத்துப் பார்ப்பது பெரிய வேலை. இப்போதுள்ள பெற்றாருக்குப் பெரும் கவலையைக் கொடுத்தது. அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. 'நீங்க இருந்தா கொஞ்சம் தைரியமாயிருக்கும். நான் தனிய எப்படிச் சமாளிப்தென்றுதான் யோசினை'. அவளது கண்கள் குளமாயிற்று. அவள் கண் கலங்குவதையிட்டு வேதனை கொண்டார். 'பவளம் கவலையை விடு. நடப்பது நடக்கட்டும் எல்லாம் இறைவன் செயல். நாம ஆருக்கும் கெடுதல் செய்யல்ல. சொல்லியவாறு தனது கண்ணீரை அவளுக்குத் தெரியாதவாறு துடைத்துக் கொண்டார். படலையில் சைக்கிள் மணி ஒலித்தது. 'ஆரது' என்று பவளம் எட்டிப்பார்த்தார். 'அட தம்பி சுந்தரம் வா. அதிசயமாயிருக்கு. எப்படி இந்த நேரத்தில் கடிதம் வரும். கடிதம் மண்டூருக்கு வர எப்பிடியும் ஒரு மணியாகுமே'? கூறியவாறே படலையடிக்குச் சென்றாள். 'அம்மா ஐயா இருக்கிறாரா'? கேள்வியோடு சுந்தரம் உள்ளே வந்தான். 'ஓமோம்.. வா. சுந்தரம்.' புலவர் எழும்பி வந்தார். 'ஐயா..உங்களுக்குத் தந்தி வந்திருக்கு. அதுதான் தர வந்தனான்'. தபால்காரச் சுந்தரம் கையிலிருந்த தந்தியைக் கொடுத்தான். 'தந்தியா... எனக்கு யாரிருக்கா அனுப்ப? கொண்டா பாப்பம்' வாங்கிப் பிரித்துப் படித்தார். சிறகில்லாது வானில் பறக்கும் உணர்வினைப் பெற்றார். அவருக்கு ஆச்சரியம். அத்துடன் அதிர்ச்சியாகவும் இருந்தது. 'இஞ்சார் பவளம். எனக்கு மண்டூருக்கு மாற்றம் போட்டிருக்கு. கந்தவனத்தார் சொன்னது சரியாய்ப் போச்சு. முதலில் அந்த மனிசனுக்குத்தான் இதைச் சொல்லணும்.' கூறிக்கொண்டு தந்தியை சட்டைப் பொக்கற்றில் மடித்து வைத்தார். 'கடவுள் சோதிக்கிறது மனிதர்களைப் புடம்போடத்தான். கஸ்டம் வந்தால்தானே கடவுளை நினைக்கிறம்.' பவளம் மனதில் இனந்தெரியாத பக்தியுணர்வு பீறிட்டுப் பாய்ந்தது. புலவர் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு கந்தவனத்தாரைத் தேடிப் போனார். ஏனோ அவரது மனம் கனத்தது. 'அருமையான பிள்ளைகள். அன்புடைய சனங்கள். எப்படி அந்தச் சனங்களை விட்டு வருவது.? சீ... இந்த மனம் பொல்லாதது. இங்கிருந்தால் அங்கு இருப்பது நல்லதாகத் தோன்றுகிறது. அங்கிருந்தால் இங்கிருப்பது நல்லதாகப் படுகிறது. இல்லாததையெல்லாம் எண்ணி ஏங்குகின்றது. கந்தவனத்தார் தூரத்தில் வந்து கொண்டிருந்தார். சைக்கிளை விட்டு இறங்கி நின்றார். கந்தவனத்தாரிடம் செய்தியைச் சொன்னார். தனது சங்கடத்தையும் சொன்னார். அவர் ஒரு சிரிப்புச் சிரித்தார். புலவருக்கு அதன் பொருள் விளங்காமலில்லை. புலவரே நீங்கதானே 'தோப்பூரில் வேலை செய்யும் சோமசுந்தரம் பிள்ளை உனக்கு ஆப்பு வெச்ச தாரு அதனை அகற்றி வைப்பவர் யாரு. என்று பாடிநீங்க. ஆப்பு அகற்றப்பட்டுவிட்டது. சந்தோசமாக உலாவருவோம். நம்மட ஊருக்கு நல்லதச் செய்வம். வாங்க ஒருக்கா முருகனிட்டப் போய்வருவம்.' கோயிலுக்குச் சென்று மனதார வணங்கினார். விடைபெற்று வீட்டுக்குத் திரும்பினார்;.


கற்பனை கலந்த உண்மை

2. அவளும் அவனும்

அவளது முகம் என்றும் இல்லாதவாறு வாடியிருந்தது. மனம் சோர்ந்து பற்றில்லாது தவித்தது. இன்று யார் முகத்தில் விழித்தாளோ தெரியவில்லை. அலுவலகத்தில் சுறுசுறுப்பாக இயந்திர கதியில் செயற்பட்டாள். கொம்பியூட்டரில் தரவுகள் யாவற்றையும் திணிக்க முயன்றாள். அறிக்கையில் வரைபுகளை வரையத் தரவுகளைக் கொடுத்தாள். வரைபுகள் சரியாக அமையவில்லை. முயன்று முயன்று தவறி.. தவறிக் கொண்டே போயின. அழுகை அழுகையாக வந்தது. நேரம் போய்க் கொண்டிருந்தது. அவளுக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. கைகளால் நெற்றியை அழுத்தித் தேய்த்தாள். தலையை இருகைகளாலும் தாங்கிவாறு குனிந்து இருந்தாள். அவளது செயலை மனேஜிங் டிரெக்டர் அவதானித்து இருக்கவேண்டும். அவர் அவள் பக்கம் வந்தார்.'என்ன லதா இண்டைக்கு வழமைக்கு மாறாக இருக்கிறியள். ஏதும் பிரச்சினையா'? அக்கறையோடு மனேஜிங் டிரெக்ரர் கேட்டார். அவருக்கு விரைவில் தனது வேலைகள் முடியவேண்டும் என்ற கரிசனை.'அப்படி ஒன்றுமில்லை சேர்.' பொய்யான புன்முறுவலை வரவழைத்தவாறே பதிலளித்தாள். ஆனால் அவளது முகம் காட்டிக்கொடுத்து விட்டது. அகத்தின் அழகு முகத்தில் தெரிந்தது. 'லதா பொய் சொல்லாதீங்க. பொய் சொல்வதென்றாலும் பொருந்தச் சொல்லவேணும். உங்கட முகம் 'அது பொய்' என்று சொல்லுது. என்ன பிரச்சினை என்று என்னட்டச் சொல்லுங்க. உங்கட அப்பா அந்தஸ்ததில் இருந்து கேட்கிறன். என்னால் முடிந்த உதவியைச் செய்யுறன். மனது ஆறுதல் அடையும்.''அப்படி ஒன்றும் பெரிசா இல்லை சேர்.''பெரிசாக இல்லையெண்டால் ஏதோ ஒண்டு இருக்குது என்று அர்த்தம். அதுதான் என்ன?. சொல்லுங்க.' அவர் விடுவதாக இல்லை. அவளுக்குச் சங்கடமாக இருந்தது. யோசித்தாள்.'அது வந்து... மனம் சரியில்லை சேர்... மகள் சிந்துவுக்குச் சுகமில்லை. நாளைக்கு நமது கருத்திட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்க வேணும். அது இன்னும் முடியல்ல. அதுதான் கவலையாக இருக்கிறது. இழுத்து இழுத்து ஒருவாறு சொல்லிமுடித்தாள். அவள் கண்கள் கலங்கிக் கண்ணீர்த் துளிகள் முட்டின. வுழமையாகச் சுறுசுறுப்பாக இயங்குமi; அவள் இன்று நண்பகல் வரை பதட்டமாக இருந்தாள். லதா மிகவும் கெட்டிக்காரி. கருத்திட்டம் தயாரிப்பதில் வல்லவர். ஆவளால் தயாரிக்கப்பட்ட பல கருத்திட்டங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிறுவனத்துக்கு நல்ல பெயரைக் கொடுத்திருந்தது. அவளால் நிறுவனத்துக்குப் பல நன்மைகள் கிடைத்துள்ளன. லதாவுக்கு மதிப்பும் மரியாதையும் நிறுவனத்தில் கிடைத்தது. மனேஜிங் டிரெக்ரர் அவளது மனநிலையைப் புரிந்து விட்டார். அவள்மேல் இரக்கம் உண்டாகியது.
'அதுதானே பார்த்தன். ஏதோ ஒன்று இருந்தபடியால்தான் நீங்க இண்டைக்கு டல்லா இருக்கிறீங்க. வழமையான சுறுசுறுப்பும் இல்ல. லதா நானும் மனுசன்தான். எனக்கும் மனசு இருக்கு. மனநிலை சரியில்லாதபோது எந்த வேலையும் ஓடாது. தவிரவும் வேலை செய்யுமi;போது தவறுகள் ஏற்படச் சந்தர்பங்கள் நிறையவே உண்டு. இப்படியே இதெல்லாம் கிடக்கட்டும். அறிக்கை முக்கியமில்லை. பிள்ளையின் உடல்நிலைதான் முக்கியம். ஆறிக்கையை அடுத்த கிழமையும் அனுப்பலாம். அதற்கு அவகாசம் இருக்கிறது. முதல்ல போய் பிள்ளையைப் பாருங்கோ. போங்கோ. கூறிவிட்டு அவர் போய்க் கொண்டிருந்தார். அவளது மனதில் சற்று நிம்மதி வந்து குந்திய உணர்வு ஏற்பட்டது. லதாவுக்குப் பெரியதொரு பாரம் இறங்கியதுபோல் இருந்தது. மயேஜர் மீது இருந்த மதிப்பும் மரியாதையும் அதிகரித்தது. வயதுக்கேற்ற அனுபவமும் அவரிடம் இருந்தது. அப்படி இல்லாவிடில் இப்படிப்பட்ட பெரிய நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த முடியுமா?.
'இந்த மனேஜர் என்னைப் புரிந்த அளவிற்கு என்ர மனிசன் என்னைப் புரியல்ல. இந்த ஆண்வர்க்கமே அப்படித்தான். சரியான சுயநலவாதிகள்..' அவளது மனம் கணவனை எண்ணிக் கோபப்பட்டது. ஒருபக்கம் வேதனையாகவும் இருந்தது. கண்கள் குளமாகிக் கரைமுட்டி உடைந்து வடிந்தது. இந்தப் பெண்களுக்கு எங்கிருந்து இவ்வளவு கண்ணீர் வருகிறதோ தெரியாது. கண்ணீராலேயே சாதித்து விடும் ஆளுமை பெண்களிடம் மட்டுமே உள்ளது. பிரச்சினைகள் என வரும்போது அதற்கு முகம்கொடுத்துச் சமாளிக்க முடியாதபோது கண்ணீரைக் கொட்டி அழுது தீர்ப்பது பெண்களுக்கே உரிய செயலாகும். அதுவும் ஒரு வகையில் நல்லதுதான்.துயரம் வரும்போது அதனை அடக்கி வையாது இப்படி வெளியில் கண்ணீரைக் கொட்டிவிடுவதால் அவர்களது மனம் அமைதியடைகிறது. முன அழுத்தம் குறைகிறது. அடிக்கடி துடைத்துக் கொண்டாள்.
மேசைமேல் கிடந்த கோவைகளை மூடி அலுமாரியில் திணித்தாள். கொம்பியூட்டரை உறையினுள் அடக்கி மூடினாள். சோல்வதற்காக மனேஜரின் அறைப்பக்கம் போனாள். அவளைக் கண்டதும் 'லதா இன்னும் நீங்க போகல்லையா? போய் பிள்ளையைப் பாருங்க'. அவரிடமிருந்து பதில் வந்தது. மீண்டும் தனது இருக்கைக்கு வந்து தனது 'ஹான்பாக்கை' எடுத்தாள். அவசர அவசரமாகக் கிளம்பினாள். அலுவலகத்தை விட்டு வீதிக்கு வந்தாள். வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தன. கொழும்பில் காலி வீதி சனங்களால் நெருக்குவாரப் பட்டது. வாகனங்களின் இரைச்சல் காதையடைத்தது. வாகனங்களின் புகையும், தூசியும், இரைச்சலும் பலன்களைச் சித்திரைவதை செய்தன. எவ்வளவு சனங்கள். வாகனங்கள். இந்த வாகனங்களும். சுனங்களும் எங்கிருந்து புறப்பட்டு வருகின்றனர்? அவள் மனம் கேள்விகளால் நிறைந்திருந்தது. ஆனால் பதில்தான் இல்லை. மனம் வீட்டைச்சுற்றி வலம் வந்தது. கண்கள் அவள் வீடு செல்வதற்கான வஸ் வண்டியைத் தேடின. கால்கள் நடந்தன. அவள் வழமையாக வஸ்வண்டியில் ஏறும் தரிப்பிடத்தை அடைந்தாள்.
அவள் மனதில் ஒருவித பயம் இருக்கத்தான் செய்தது. தமிழர்கள் மட்டுந்தான் பொட்டு வைப்பார்கள். அந்தப் பொட்டு எவ்வளவு அழகானது. புனிதமானது. முகத்துக்குப் பொலிவூட்டுவது. இனவிரிசல் தொடங்கிய காலத்திலிருந்து இந்த நாட்டில் அப்படியொரு அநர்த்தம். பொட்டு வைத்தவர்கள் தாக்கப் பட்டார்கள். ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டுக் குதறப் பட்டார்கள். கொலைசெய்யப் பட்டார்கள். அதை நினைக்கவே பயமாக இருந்தது. இப்போதும் தமிழர்களுக்குப் பூரண பாதுகாப்பு என்று சொல்ல முடியாது. வுழிப்பறிப்புகளும், கொலைகளும் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவளால் கற்பனை செய்து பார்க்கவும் முடியவில்லை. கையைப்புரட்டிப் பார்த்தாள். நேரம் போய்க் கொண்டிருந்தது. தன்னைப் போல் ஆடை அணிந்தவர்களைக் கண்டால் மட்டும் ஒரு புன்னகையை உதடுகளில் வரவழைத்துத் தவழவிட்டிருந்தாள். மனமெல்லாம் சிந்துவைச் சுற்றியே வந்தது.
இன்று காலை வேலைக்குப் புறப்படும்போது சிந்துவின் பிஞ்சு விரல்கள் சுடிதாரியைப் பிடித்து இழுத்ததை நினைந்து கொண்டாள். இரவு முழுவதும் அவளுக்குக் காய்ச்சல். ஊடல் நெருப்பாய் எரிந்தது. இன்று அவளுக்கு வேலைக்குப் போவதற்கு மனமே இல்லை. ஆனால் கருத்திட்ட வேலையை முடித்துக் கொடுக்க வேண்டிய இறுதிநாள் இன்றாகத்தான் குறிப்பிடப்பட்டிருந்தது. போய் கருத்திட்டத்தை முடித்துக் கொடுத்தே ஆகவேண்டும். புறப்பட்டு வந்து விட்டாள். சிந்து காய்ச்சலில் எப்படிக் கஸ்டப்படுதோ தெரியாது. அந்த இரண்டு வயதுப் பிஞ்சு இப்போது தேடும் என்றதை நினைந்ததும் அவளது கண்கள் பனித்தன. போனதும் மருந்து எடுக்கப் போகவேணும். புhழாய்ப் போன வஸ் இன்னும் வரவில்லை. நேரம் மந்த கதியில் நகர்ந்து கொண்டிருந்தது. மெதுவாக அவள் போகவேண்டிய அந்த இலக்க வஸ் வந்து நின்றது. முண்டியடித்து முயன்றும் முடியவில்லை. அவ்வளவு சனம். அனைவருக்கும் அவசரம். அடுத்து வரும் வஸ்ஸைப் பார்த்தாள். அடிக்கடி வஸ் வரும் திசையை நோக்கித் தவமிருந்தாள். வீதியைப் பார்த்து பெருமூச்செறிந்தாள். என்ன செய்வது? ஒரே ரென்சனாய் இருந்தது.
அவள் மனம் பதறிக் கொண்டிருந்தது. தனது கணவன் தரன் மேல் ஆத்திரமாக வந்தது. காலையில் நடந்ததை நினைந்து கொண்டாள். ஓவென்று அழவேண்டும்போலிருந்தது. 'பெண்ணென்றால் இவங்களுக்கு இளக்காரமாய்ப் போய்விட்டது'. மனதுக்குள் நொந்து கொண்டாள். முகம் அடிக்கடி கடுமையாகிக் கொண்டிருந்தது. கலியாணம் முடிக்கும்வரை தேனொழுகப் பேசுவார்கள். காலைக் கையைப் பிடிப்பார்கள். எல்லாம் முடிஞ்சபின் பெரிய லெவல் இவங்களுக்கு. இண்டைக்கு இரண்டில் ஒன்று பார்க்க வேணும். இன்று காலையில் நடந்த நிகழ்ச்சி மனத்திரையில் வந்து விழுந்து படமாக ஓடியது. மறக்க முயன்றும் முடியவில்லை.
காலையில் அலுவலகம் போவதற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஒன்றும் ஓடவில்லை. 'இஞ்சாருங்கோ அப்பா... சிந்துவுக்குச் சுகமில்லை. மருந்து எடுக்க வேணும். இண்டைக்கு நீங்க லீவு எடுத்துச் சிந்துவோட வீட்டில் நில்லுங்க. நான் நாளைக்கு லீவு எடுக்கிறன்.' லதா சுடிதாரைச் சரிசெய்தவாறே கூறினாள். தரனுக்கு அது பிடிக்கவில்லை. தரன் இரவு முழுவதும் கொம்பியூட்ரில் வேலை செய்து கொண்டிருந்தான். மறுநாள் நடைபெறும் ரெண்டர் மீற்றிங் பற்றிக் கூறியுமிருந்தான். என்ன விசர்கதை கதைக்கிறாய். இண்டைக்குத்தான் ரெண்டர் கொடுக்கிறதுக்குக் கடைசிநாள் என்று உனக்குத் தெரியும்தானே.? துவறினால் நமது கம்பனிக்கு நட்டமப்பா. ஏவ்வளவு நம்பிக்கையோடு கம்பனியை ஒப்படைத்து இருக்கிறார்கள். எத்தனை தரம் சொல்லியிருக்கிறன். உனக்கு விளங்கல்லையா?' அவன் புறப்பட்டுக் கொண்டே கூறினான்.
தரன் அந்த நிறுவனத்தில் பயிலுநராகவே சேர்ந்தவன். சுறுசுறுப்போடு சுழன்று உழைத்தவன். அவனது கடின உழைப்பு நல்ல பெயரைத் தேடிக் கொடுத்தது. அவனது திறமையைப் பார்த்து நிறுவனத்தின் பங்காளிகள் தரனை கம்பனியின் மனேஜராக அண்மையில் பதவியில் அமர்த்தினர். இப்போது அவன் திறமைவாய்ந்த பொறுப்புள்ள மனேஜராகக் கடமையாற்றுகிறான். ஓய்வு ஒழிவில்லாது உழைப்பவன். அவனுக்குப் பொறுப்புக்கள் அதிகம். லதாவும் இதனை உணர்ந்திருந்தாள். அவனது கஸ்டத்தைப் பார்த்துப் புரிந்து அனுதாப்பட்டும் இருக்கிறாள். இன்று லதாவின் நிலையும் சங்கடமானதாக இருந்தது. யார் யாருக்காக அனுதாபப்படுவது. லதாவுக்கு பொறுமை இன்று எல்லைமீறிவிட்டது. அவளை அறியாமலேயே ஆட்டிலறி ஷெல் விழுந்து வெடித்துச் சிதறுவது போல் சொற்கள் பறந்தன.
உங்களுக்கு மட்டுந்தானா அவசர வேலை.? நானும் இண்டைக்குக் கருத்திட்ட அறிக்கையை முடித்துக் கொடுக்க வேணும். உங்களைப் போலதானே நானும் வேலை செய்யிறன். ஏனக்கும் பொறுப்புக்கள் இருக்கு. நான் அதுகள முடித்துக் கொடுக்க வேணும்தானே.? வீட்டிலும் வேலை. கந்தோரிலும் வேலை. எல்லாத்திலயும் மாட்டிக் கொண்டு தவிக்கிறன். கண்ணீருடன் கொட்டி வைத்தாள். தரனுக்குப் பொறுமை போய்விட்டது. லதாவை எரித்து விடுவது போன்று பார்த்தான். 'லதா .. நல்லா யோசித்துப் பார். நமது கஸ்டத்தைப் போக்கத்தானே நான் ஓய்வில்லாது இப்படி பாடுபட்டு உழகை;கிறன். ஏன் இதை எண்ணிப் பார்க்கல்ல. எல்லாத்திலயும் மாட்டிக் கொண்டு தவிக்கச் சொன்னேனா? தவிரவும் உன்னை யார் வேலைக்குப் போகச் சொன்னது? இனிமேல் கஸ்டப்படத் தேவையில்லை. வேலையை விட்டுப் போட்டு இருக்கச் சொல்லி எத்தனை தடவைகள் சொல்லியிருக்கிறன்.' தரன் கடுகடுப்போடு கொட்டி வைத்தான்.வேலைக்குப் போறதுதான் இப்ப உங்கட கண்ணில குத்துதாக்கும். நான் வேலைக்குப் போகாட்டித் தெரியும் கடுப்பு. நான் வேலைக்குப் போறதால என்ன குடிமுழுகிப் போச்சு. பெண்கள் வேலை செய்யக் கூடாதென்ற சட்டமா? மூச்சு விடாது சொற்களை அள்ளி வீசினாள்.'இரண்டு பேரும் வேலைக்குப் போறதால நமது பிள்ளை பாதிக்கப்படுது. இது உனக்கு விளங்கல்ல. குடும்பத்தில ஒரு ஆள் வேலைசெய்தால் போதும்.' துரன் பதிலுக்குக் கூறிவைத்தான். லதாவுக்குப் பொத்துக் கொண்டு ஆத்திரம் வந்தது. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு. அவளும் பொரிந்து தள்ளினாள். 'பிள்ள ஏன் பாதிக்கப்படுது? நான் வேலைக்குப் போறது உங்களுக்குப் பொறாமை எண்டு சொல்லுங்க.''நீ வேலைக்குப் போறதால எனக்கு ஏன் பொறாமை? உனக்கு விசர். பெண்கள் வேலை செய்வதில் தப்பில்லை. ஆனால் திருமணத்துக்குப் பிறகு யோசிக்க வேணும். ஆளையாள் புரிந்து கொள்ள வேணும். பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்தெடுக்க வேணும்.. அதுக்குக் கணவனும் மனைவியும் விட்டுக் கொடுத்து வாழவேணும். வேலைக்குப் போறதும், உழைக்கிறதும் வாழ்க்கை யில்லை. சந்தோசம் குடும்பத்தில் நிலவவேணும். இப்ப நான் எடுக்கிற சம்பளம் நமது குடும்பத்தை நடத்தப் போதுமானது. நீ வேலைக்குப் போய்த்தான் உழைக்க வேணும் என்ற கட்டாயம் இல்லை.' தனது அலுவலக ஆவணங்களை அடுக்கிக் கொண்டே பதிலளித்தான். 'நான் வேலைக்குப் போவதுதான் உங்கட கண்ணில குத்துது' அவள் யோசிக்கமாமல் பொரிந்து தள்ளினாள். தரன் ஒன்றும் பேசாது புறப்பட ஆயத்தமானான். லதாவின் அம்மா தேநீர் கொண்டு வந்தார். மேசையில் காலை உணவு அப்படியே இருந்தது. வீட்டு வேலைகளோடு சிந்துவையும் லதாவின் அம்மாதான் கவனிப்பவர். அவர் இருப்பதால் அவர்களுக்குப் பெரிதும் ஆறதலாக இருந்தது. 'மாமி சிந்துவைப் பார்த்துக் கொள்ளுங்க.' கண்ணாடியைப் பார்த்துக் கழுத்துப் பட்டியைச் சரிசெய்தவாறே கூறினான். வெளியில் வந்து தனது மோட்டார் சைக்கிளை இயக்கினான்.'தம்பி சாப்பிடல்லயா?''வேண்டாம் மாமி. நான் பிறகு வாறன்.' மோட்டார் சைக்கிள் இரைந்தது. புறப்படத் தயாரானான். லதா பாய்ந்து வெளியில் வந்தாள்;. ஆத்திரம் பொத்திக் கொண்டு வந்தது.'ஆர் சிந்துவை மருந்தெடுக்கக் கூட்டிப் போவது'? வெளியில் வந்து உரத்துச் சத்தமிட்டாள். பதில் சொன்னால் வாய்த்தர்க்கம் வளர்ந்து விடும். பெரிய குழப்பமாகிவிடும் மௌனமானான். புதில் கூறாமல் சென்றுவிட்டான். லதா குலுங்கிக் குலுங்கி அழுதாள். அவள் ஏன் அழுதாள் என்பது அவளுக்கே தெரியாது. திருமணம் முடித்த நாளிலிருந்து நேற்று வரை தரன் வேலைக்குப் போகும்போது வாசல் வரை வந்து புன்னகையோடு வழியனுப்பி வைத்தவள். இன்று அப்படிச் செய்யவில்லை. அதற்கு அவகாசமும் இருக்கவில்லை. அவளுக்குப் பெரிய தர்மசங்கடமாகி விட்டது. தங்களுக்குள் ஒரு இடைவெளி உருவாகி வருவதை உணர்ந்தாள். சிந்துவை நினைந்து உருகினாள். பெண்ணாகப் பிறந்ததே பெரிய பாவமா? பலதையிட்டும் வருந்தினாள்.' பிள்ளை உனக்கு வரவர வாய் கூடிப்போச்சு. பேசாம உன்ர வேலையை நீ பார். நான் இருக்கிறன்தானே? சிந்துவை நான்தானே பார்க்கிறன். வேலைகளை முடிச்சுப் போட்டு மருந்தெடுக்கக் கூட்டிப்போவன். இதுக்குப் போய் அவரோட ஏன் சண்டை பிடிக்கிறாய். பாவம் தம்பி. அது சாப்பிடாமப் போகுது. அவர் ஆம்பிள. ஆயிரம் வேலைகள் இருக்கும். அவர் சொன்னதும் சரிதானே'? அம்மா ஒரு ஆறுதலுக்காகத்தான் கூறினார். லதாவுக்கு அது பிடிக்கவில்லை.'நானா சண்டை பிடிக்கிறன். அவர் ஆம்பிள என்டால் அடங்கிப் போகணுமா? ஆணுக்கொரு நீதி. பேண்ணுக்கொரு நீதியா? நல்ல நியாயம். ஒரு நாள் லீவு போட்டுட்டு சிந்துவோட நிக்கச் சொன்னனான். அது சண்டையா? உங்களுக்கும் ஒன்டும் விளங்கேல்ல. நீங்களும் அவர்ர பக்கம்தான். அவளுக்கு எரிச்சலாக வந்தது. கண்ணும் மூக்கும் கசிந்தன. முகத்தைத் துடைத்துக் கொண்டாள். தான் தனிமரமாக நிற்பதாக உணர்ந்தாள். இந்த அம்மாவும் அவருக்குத்தான் சப்போட் பண்ணுறா. சே ..என்னை யாரும் புரியல்ல. அலுத்துக் கொண்டாள்.'பிள்ள.. அவருக்கு அவசரமான வேலையென்டபடியால்தான் போறார். எப்பயாவது இப்படி நடந்திருக்கிறாரா? நீ இதை விளங்கிக் கொள.; குடும்பம் என்றால் ஆயிரம் இருக்கும். இப்ப கோபிப்பியள். பிறகு சந்தோசமாக இருப்பியள். இது சகஜம். இதெல்லாம் நிரந்தரமான சண்டை இல்ல. எல்லாத்தையும் விட்டுப் போட்டு நீயும் வேலைக்குப் போய் வா. புறப்படு'. கூறிவிட்டு அவ்விடத்தில் நில்லாமல் வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டாள். லதா தேநீரை மட்டும் குடித்தாள். உடையைச் சரிசெய்தாள். சிந்துவிடம் சென்றாள். சுpந்து அம்மா வேலைக்குப் போய்வாறன். ஆம்மம்மாவோட இருங்க. அம்மா கெதியாக வந்திருவன். சுரியா?.' கூறிக்கொண்டு அவளது தலையைதர் தடவிவிட்டாள். சிந்துவுக்கு இதமாக இருந்தது. வாஞ்சையோடு தாயின் சுடிதாரைப் பிடித்துக் கொண்டாள். மெதுவாக அவளது பிஞ்சு விரல்களை விலக்கிவிட்டு அந்த விரல்களில் ஒரு பொம்மையைத் திணித்து விட்டாள். சிந்து பொம்மையோடு மெல்ல எழுந்து நின்றாள். கைகளால் 'டாட்டா' காட்டினாள். லதா புறப்பட்டுப் போய் விட்டாள். 'என்ன லதா இன்டைக்கு நேரத்துக்கே வீட்டுக்குப் புறப்பட்டாச்சு'? குரல்கேட்டு லதா திரும்பினாள். மாலதி புன்னகையோடு நின்று கொண்டிருந்தாள். தன்னைச் சுதாகரித்துக் கொண்டாள். தெரியாத உலகத்தில் தெரிந்த முகத்தைக் கண்டதும் ஒரு நிம்மதியை உணர்ந்தாள். 'என்ன கடும் யோசினை'? தொடர்ந்து மாலதி கேட்டாள். 'ஓன்டுமில்லை. சிந்துவுக்குச் சுகமில்லை. மருந்தெடுக்கவும் இல்லை. அதுதான் நேரத்துக்குப் போகலாம் என்று வந்தன். ஆனால் இந்த வஸ் வந்தபாடில்லை'. லதா பதிலளித்தாள். கண்கள் வஸ் வரும் வீதியைத் துளாவின.
தூரத்தே அந்த வஸ் வந்து கொண்டிருந்தது. தனது சிந்தனையில் இருந்து விடுபட்டாள். மாலதியோடு சேர்ந்து பாய்ந்து ஏறிக்கொண்டாள். இருப்பதற்கு இருக்கை கிடைக்கவில்லை. ஐந்து கிலோமீற்றர் வரை நின்றே பயணித்தாள். அவளது உடல் வஸ்சில் இருந்ததேதவிர உள்ளம் சிந்துவைச் சுற்றியே வந்தது. தரன்மேல் கோபமாக இருந்தாலும், அவன் இன்று சாப்பிடாமல் வேலைக்குச் சென்றது அவளது உள்ளத்தில் காயத்தை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது. வஸ் தரிப்புக்களில் நிற்கும் போதும், புறப்படும் போதும் மனித உடல்கள் முட்டி மோதி உரைஞ்சி வெயர்வையோடு மனித வெப்பத்தையும், அதனால் ஏற்படும் வெயர்வை மணத்தையும் வஸ்சினில் பரவி விட்டிருந்தது. மனித வெக்கை பொல்லாதது. வேப்பமான உடல்கள் முட்டும்போது என்ன மாதிரி அவிச்சல் ஏற்படுகிறது. மூச்சுத்திணறலோடு பயணித்துத் தனது பயணத்தை முடித்துக் கொண்டாள். மாலதிக்குக் கையசைத்து விட்டு இறங்கினாள். நடந்து வீட்டுக் கேற்றைத் திறந்ததும், பாய்ந்து வீட்டினுள்ளே வந்தாள்.
'அம்மா! சிந்துவுக்கு இப்ப எப்படி இருக்கு? மருந்து எடுத்தீங்களா? காய்ச்சல் இப்பவும் இருக்கா? கேள்வி மேல் கேள்வி கேட்ட மகளுக்கு அம்மா பதில் ஏதும் சொல்லவில்லை. அவளைப் பார்த்துச் சிரித்தாள். அவளது போக்கு வித்தியாசமாக இருந்தது. எவ்வளவுதான் படித்திருந்தாலும் அவளும் சாதாரண பெண்தானே? 'நான் கேள்வி கேட்கிறன். பதில் சொல்லாமல் சிரிக்கிறீங்க'. லதா சடசடவெனப் பொழிந்து தள்ளினாள்.'காய்ச்சல் இருக்கா இல்லையா என்று போய்ப் பார்க்கிறதுதானே.' ஆம்மா பதில் சொல்லிவிட்டுத் தன் கடமையில் ஆழ்ந்து விட்டார். கையிலிருந்த பொருட்களை மேசைமேல் வீசி விட்டுச் சிந்து படுத்திருந்த அறையினுள் ஓடினாள். மெதுவாகக் கதவைத் திறந்து பார்த்தாள். அவள் ஆடிப்போனாள். ஆப்படியே அசைவற்று நின்றாள். அவளது கண்களை அவளால் நம்பமுடியவில்லை. சிந்து தரனின் அணைப்பில் உறக்கத்தில் இருந்தாள். மெல்லச் சிந்துவைத் தொட்டுப் பார்த்தாள். காய்ச்சல் இல்லை. வந்தது போலவே வெளியில் ஓடினாள். ஆம்மாவிடம் கேட்டாள். தரன் வேலைக்குப் போனதையும், உடன் திரும்பி வநது தாங்கள் மருந்தெடுத்து வந்ததையும் அம்மா கூறினார். அவள் தன்னை மறந்த நிலையில் நடந்தாள். அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டாள். அப்படியே கட்டிலில் சிலைபோல் இருந்து விட்டாள். அவளது கைகள் தரனின் கால்களைப் பற்றியிருந்தன. விழிகள் கண்ணீரில் மதந்தன. சூடான கண்ணீர்த் துளிகள் தரனின் கால்களில் விழுநது நனைத்தன. விழித்துக் கொண்ட தரன் லதாவை அன்போடு பார்த்தான். அவள் தேம்பி அழுதாள். தனது தவறுகளைக் கண்ணீரால் கழுவிக் கொண்டாள். லதா.. சின்னப் பிள்ளைபோல்..என்ன இது? அவனே அவளது முகத்தை ஏந்தித் துடைத்துவிட்டான்.நமது நிறைவான செல்வம் சிந்துதான். அதை நான் மறப்பேனா? காலையில் நடந்ததை கனவாக நினைத்துக் கொள். ஆறதல் கூறினான். அவனது மார்பில் முகம் புதைத்து விக்கி விக்கி அழுதாள். அவளை அப்படியே அணைத்துக் கொண்டான். லதாவின் உள்ளத்தில் தரன் விஸ்வரூபம் எடுத்திருந்தான். ஆண்கள் பொல்லாதவர்கள் இல்லை. ஆணும் பெண்ணும் சமமெனக் கொண்டதுதான் வாழ்க்கை என்பதை லதா புரிந்து கொண்டாள்.
யாவும் கற்பனை

1. ஏன் வந்தாய்?

மார்கழி மாதத்தின் பின்நிலவு வானில் பவனிவந்து கொண்டிருந்தது. கருமுகிற் கூட்டம் நிலவுக்குப் பட்டுச்சாத்திப் பார்க்க முனைகிறது. விரைந்து வரும் காற்றலை முகிற்கூட்டத்தை விரட்டிக் கொண்டிருந்தது. நிலவுப் பெண் முகத்தைக் காட்டுவதும் மறைப்பதுமாய் பூச்சாண்டி காட்டி விளையாடியது. கருநீல வானில் பால்நிலவின் விசிறல். அற்புதமாய் பிரகாசித்தது. மழைத்தூறலின் பின் இடைவிட்ட பனிகலந்த கடுவலின் தாக்கம் உடலைத் தொட்டுச் சிலிர்க்கச் செய்து கொண்டிருந்தது. ஆலங்கேணிக் கிராமத்தின் மேற்கெல்லையாக ஊடறுத்து ஓடும் பாசியாற்றின் அழகு மனதைக் குடைந்து கொண்டிருந்தது. ஆற்றின் கரையெங்கும் வெண்கண்ணாவின் ஆட்சி. கண்டல் வகையின் ஊடுருவல் இடையிடையே குத்திட்டுக் குவிந்து கூத்திடுகின்றன. உப்புநீரில் வாழும் உயிரினங்களின் ஊசலால் தோன்றும் சிறிய அலைகள் கண்ணாக்களில் மோதி உடைந்து கலகலத்துக் கொண்டிருந்தன. கண்ணாவின் மூச்சுவேர்கள் சேற்றைப் பிளந்து 'இச் இச்' என்ற ஒலியோடு வெளிக்கிளம்பும் கிசுகிசுப்பு. சிள்வண்டின் கீர்த்தனைகள். உப்புநீரும், நன்னீரும் கலந்த வெள்ளம் ஆற்றில் ஓடிக்கொண்டிருந்தது. மீன்களின் துள்ளல். இறால்களின் பாய்ச்சல். கானாங்கோழிகளின் கெக்கலிப்பு. ஆக்காண்டியின் இனிய எச்சரிக்கை. கிராமத்தின் சூழல் இனிமையானதுதான் என்பதை பறைசாற்றிக் கொண்டிருந்தன. நாட்டுப் பிரச்சினைகள் இல்லாதபோது கிராமத்தின் மக்கள் அனுபவித்த சுகம் அனந்தமானது. இந்தச் சமாதான நடவடிக்கைகள் நிரந்தரமானதாக அமையவேண்டும் என்று ஏங்காத மனங்கள் இல்லை. இந்நிலை நீடிக்க வேண்டும் என்று பிரார்த்திக்காத மக்களும் இல்லை.
சோமசுந்தரனின் கால்களை பனியும் மழைத்துளியும் கலந்த நீரில் குளித்த வயல் வரம்புப் புல் தொட்டுத் தடவிக் கொண்டிருந்தன. அந்த நெருடல் பட்ட கால்கள் சில்லிட்டன. அவன் வயற்பரப்பில் நடந்து கொண்டிருந்தான். மாதங்களில் மார்கழிதான் அற்புதமானதாம். மழைத்தூறலும் பனிகலந்த காற்றும் இயற்கையின் இங்கிதம். அதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அதிகாலை ஐந்து மணி. கருமைக் கடலாகக் காற்றில் அசைந்து பனிநீரைச் சுமந்து தலைகுனிந்து நிற்கும் வேளாண்மையை உற்றுப் பார்த்தான். குடலைப் பருவத்து வேளாண்மையிலிருந்து வீசும் வாசைன அவனைக் கிறங்கடித்தது. தனது கைகளால் தடவி விட்டபடி நடந்தான். வரம்புகளின் ஓரத்தில் நட்டிருந்த சோளம் அவனைக் கண்ட உற்சாகத்தில் சுழன்று அசைந்தன. அவற்றைப் பார்த்தபடி வயலைச் சுற்றிப் வந்தான். அந்த வயற்பரப்பின் மேற்கே வெண்கண்ணாதான் வேலி. எல்லை வரம்பில் நின்று கிழக்காகத் திரும்பிப் பார்த்தான். மேற்கு வானில் நிலவின் பவனி. அந்த ஒளியில் அவனது உருவ நிழல் வரம்பில் படுத்திருந்தது. நிமிர்ந்த கண்களில் அவனது வீடு பளிச்சிட்டது. வீட்டுப் பக்கம் கோழிகளின் கூவல். வீதியால் போகும் மாட்டு வண்டிகளின் மணியோசையும், தூரத்து வயல்வெளிகளுக்குச் செல்லும் இளைஞர்களின் கதையும் பாட்டுமாகக் கும்மாளம்.
உயர்ந்து வளர்ந்த இரண்டு மூன்று பனைகள் கருமை நிழலாக அசைந்து கொண்டிருந்தன. அவற்றின் ஊடாக வெள்ளை வெளேரென்று வீடு தெரிந்தது. சோமசுந்தரனின் நெற்றிப் பொட்டில் மின்னல் பாய்ந்த உணர்வு. அந்த வீடு அந்த இடத்தில் அமைவது பொருத்தமானது என்று கூறிச் சென்றவர் தனது அதிபர் கந்தவனத்தார்தான் என்பதை நினைத்தான். ' வீடு என்பது நாம் வாழ்வதற்காக மட்டுமல்ல. நல்லறம் புரிந்து தெய்வத்துள் நம்மை வைத்து ஒப்பிட வேண்டிய வழியைத் தேடித்தரும் இடமாகவும் உள்ளது. மனை உதவுவதுபோல் மக்கள் உதவுவதில்லை. இதனைப் பலர் புரிந்து கொள்வதில்லை. படிப்பது நமது அறிவை அகண்டமாக்குவதற்காகத்தான். அதனை அனுபவமாக்கி வாழ்க்கையைச் செவ்வனே நடத்தினால்தான் மனித குலத்துக்கு மேன்மையாகும். அதற்கு முதற்படி வீடுதான். நாம் எங்கிருந்து வந்தோமோ அங்கு போவதற்கு ஆயத்தம் செய்யுமிடமுமாகும். வீட்டுக்கு வீடு வாசற்படி என்பார்கள். அதாவது வாழ்க்கையில் நல்லன செய்வதால் மோட்சமும், அல்லன செய்தால் நரகமும் வாய்க்கும், என்பது ஆன்றோர் வாக்கு. வீடு பொருத்தமானதாக அமையவேண்டும்.' அவரே எதிரே நின்று உரையாடுவது போன்ற பிரமை. அவர் எவ்வளவு தத்துவக் கருத்துக்களை அள்ளித் தந்தார். மானசீகமாக அதிபருக்கு நன்றி கூறினான். சுமார் ஒரு ஏக்கர் வயல்நிலம் வீட்டுக் காணியோடு இருந்தது. கிராமத்தின் வீதிகளுக்கு அந்தக்காலத்தில் பெயர்கள் இல்லை. ஆனால் ஆலங்கேணிக் கிராமத்தின் வீதிகளுக்குப் பெயரிட்டு விட்டார்கள். அந்தப் பெருமை இந்தக் கிராமத்தில் பிறந்து வெளியிடங்களுக்குச் சென்று கல்வி கற்று இந்த ஊரின் எழுச்சிக்காகச் சேவை செய்த இரண்டு அதிபர்களுக்கே உரியது. அவர்களை நினைந்து நெக்குருகினான். மணல் பரந்த பிரதான வீதிக்குப் பாட்டுக்கொரு புலவன் பாரதியின் பெயர் வைக்கப்பட்டது. பாரதி வீதியில் அவனது பரம்பரைக் காணி இருந்தது. நமது மூதாதையர் தேடித்தந்த செல்வங்களை அழிப்பது தவறு என்ற கொள்கையில் நம்பிக்கையுடையவன். வீட்டையண்டி வயல்நிலம் கொண்டதாக அந்த நிலப்பரப்பு விரிந்து கிடந்தது. பிரச்சனையின் பின் காடாகக் கிடந்த காணியைத் திருத்தி வீட்டை அமைத்துக் குடியேறியிருந்தான். பச்சைப் பசேலென பயிர்கள் சிலிர்த்து அவனது உள்ளத்தை மகிழச் செய்தன.
கைகளால் வேளாண்மையைத் தடவிக் கொண்டும் அவற்றோடு உரையாடிக் கொண்டும் வரம்புகளில் உலா வந்தான். தாவரங்கள் கதைக்குமா? அவற்றுக்கு நாம் சொல்வது விளங்குமா? அவனது சிந்தனை விரிந்தது. சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் கற்பது பின்னர் வாழ்க்கையில் உதவுவதை ஒப்புக் கொண்டான். 'சுந்தரா.. நமது பிள்ளைகளைப் போலதான் பயிரினமும். நமது பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்தெடுத்தால் நாட்டுக்கு நன்மை கிடைக்கும். அவர்களின் விருத்தி மரபணுக்களால் தீர்மானிக்கப் பட்டாலும், பெரும்பாலும் அவர்கள் வாழும் சூழலில் தங்கியுள்ளது. அதற்கேற்ற சூழலை நாம் ஏற்படுத்த வேண்டும். அதேபோல்தான் பயிரினத்தைக் கவனித்தால் நம்மை அவை வாழவைக்கும். நாட்டை உயர்த்தும். கடமையைச் செய். பலனை எதிர்பாராதே. தேவையானபோது அது தானே உன்னைத் தேடிவரும்.' அவன் காதுகளில் அதிபரின் குரல் ஓங்கி ஒலித்தது. ;ஐயா, நீங்கள் அன்று கற்றுத்தந்த அறிவுரைகள் எனது வாழ்க்கையை உயர்த்தியுள்ளது. மனம் நிறைந்த நன்றியுடன் அவரை நினைவு கூர்ந்தான்.
கல்வி வெறும் ஏட்டுச் சுரைக்காயல்ல. அது சிறந்த வாழ்க்கை முறை. கற்றபடி ஓர் அளவுக்காவது வாழ்ந்தால்தான் வாழ்க்கையின் பயனை அனுபவிக்கலாம். படித்தவர்கள் எல்லோரும் சான்றோர்கள் இல்லை. கற்றபடி வாழ்பவர்களுக்குத் தோல்விகள், அவமானங்கள் வரலாம். ஆனால் அவை தற்காலிகமானவை. நிறைகுடம் தளம்புவதில்லை. அதிபர்களான கந்தவனத்தாரும், கந்தையரும் தமது முதுமைக் காலத்தைச் சொந்த ஊரில் கழிக்க வேண்டும். பாடசாலை சிறப்பாக இயங்க வேண்டும். கோயில் புனருத்தாரணப் பணிகளில் ஈடுபட்டு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். ஊரவர்களோடு உறவாடி சந்தோசமாக இருந்து சாகவேண்டும்.என்ற எண்ணங்களோடுதான் ஊருக்கு வந்தார்கள்;. ஊர்மக்களோடு அளவளாவி மகிழ்ந்தார்கள். பாடசாலைப் பக்கம் செல்வதும் ஆசிரியர்களோடு கல்வி தொடர்பாகக் கதைப்பதும், மாணவர்களிடம் பாடங்களில் வினாக்கள் கேட்டு வழிகாட்டுவதும், கோயில் வேலைகளில் ஈடுபடுவதும், அறிவுரைகள் சொல்வதும் அவர்களுக்குப் பொழுது போக்காக இருந்தது. அவர்களது வரவு ஊரவர்களுக்குப் பிடித்திருந்தது. அனுபவசாலிகளது வழிகாட்டல் இந்தக் கிராமத்தை நல்லநிலைக்குக் கொண்டு செல்லும். இதனை சோமசுந்தரன் எண்ணி புளகாங்கிதம் அடைந்தான்.
'சுந்தரண்ணே.. எங்கே இருக்கிறீங்க..?' குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்த்தான். அங்கே செல்வன் வந்து கொண்டிருந்தான். 'என்ன செல்வன்.. விடியமுதல் இந்தப் பக்கம்.?' 'இந்த அனியாயத்தைப் பாருங்கண்ண.' கையிலிருந்த அந்தத் தாளை நீட்டினான். 'என்னது..? கொண்டா பார்ப்போம்.' கையை நீட்டினான். செல்வனது கையிலிருந்த தாள் சோமசுந்தரனின் கையில் ஒட்டிக் கொண்டது. மையிருட்டில் ஒன்றும் விளங்கவில்லை. வெள்ளைத் தாளில் கோடுகள், புள்ளிகள்தான் தெரிந்தன. விறுவிறு என்று வீட்டுக்கு வந்தார்கள். அறையைத் திறந்து வெளிச்சத்தைப் போட்டார்கள். சோமசுந்தரனுக்குத் தலையில் சம்மட்டியால் அடித்த துடிப்பு. அவனது இதயம் கனத்தது. கண்கள் சுழன்றன. பலமுறைகள் அந்தத் தாளையெடுத்துப் பார்த்தான். இரண்டு பக்கங்களில் தட்டச்சு செய்து, அசிங்கமான படமும் வரைந்து, அதனை றோனியோ செய்திருப்பதையும் கண்டுகொண்டான். படித்தான். அவனால் படிக்க முடியாதிருந்தது. இதனைச் செய்தவர்கள் மனநோயாளிகள்தான். அவனுக்குச் சித்தப் பிரமை பிடித்து விட்டதுபோல் தோன்றியது. எங்களை வாழவைத்த தெய்வங்களுக்கா இந்தக் கதி? அவர்களது வயதுக்கு மதிப்பளித்தார்களா?. அவனது உடல் துடித்தது.'செல்வா.. இது யாருடைய வேலையாக இருக்கும்.' சோமசுந்தரன் கேட்டான். 'யாரென்று சொல்லமுடியும்.? ஆனால் நமது அதிபர்களது வரவை விரும்பாதவர்கள் தான் செய்திருக்க வேண்டும்.' செல்வன் கரகரத்த குரலில் கூறினான். ' நானறிந்தவரை அப்படி யாருமில்லையே. இது யாருடைய வேலையாக இருக்கலாம்.' சோமசுந்தரன் மூளையைப் போட்டுக் குழப்பிக் கொண்டான். விடைகாண முடியாது தவித்தான்.'இப்ப என்ன செய்வது.? ஊரவர்களுக்குத் தெரிந்திருக்க ஞாயமில்லை. பலர் படிக்காத பாமர மக்கள். அவர்களுக்குத் தங்கள் முயற்சிதான் பெரிதாக இருக்கும். இவற்றைப் பற்றிச் சிந்திக்க நேரமும் இல்லை. அதிபர்கள் இருவரும் இங்கில்லை. இன்று காலை ஒன்பது மணிபோல் வருவதாகச் சொன்னவர்கள். எப்படி அவர்களுக்குத் தெரிவிப்பது.?' அவர்களுக்கு ஒன்றும புரியவில்லை. கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. வேலைகள் அனைத்தும் போட்டது போட்டபடியே கிடந்தன. சிலையாக இருந்து விட்டார்கள். எவ்வளவு நேரம் அப்படி இருந்தார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. சோமசுந்தரன் நேரத்தைப் பார்த்தான்.'செல்வா. ஒன்று செய்வோம். இப்ப எட்டரை மணி. இப்பவே கிண்ணியாத் துறையடிக்குப் போவோம். அதிபர்கள் வருவார்கள். கதையோடு கதையாகச் சொல்லி விடுவோம். என்ன.?' சோமசுந்தரன் அமைதியைக் கலைத்து ஆலோசனை சொன்னான். அந்தத் தாளை மடித்துத் தனது சட்டைப் பையினுள் வைத்தான். முகத்தைக் குளிர்ந்த தண்ணீரில் கழுவினான். காற்சட்டைக்குள் தன்னைத் திணித்துக் கொண்டான். தனது சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வெளியில் வந்தான். செல்வன் ஆயத்தமாகவே வந்திருந்தான். இரண்டு சைக்கிள்களும் துறையடியை நோக்கிப் பறந்தன. மழை பெய்வதற்கான அறிகுறி இல்லை. இரவு பெய்த மழையால் நிலம் குளிர்ந்து மழைநீரால் போர்த்தி இருந்தது.
கிண்ணியாத் துறையில் இரண்டு படகுப் பாதைகள் சேவையில் ஈடுபட்டிருந்தன. அண்மையில்தான் புதியதொரு சொகுசான பெரிய படகுப்பாதை சேவையில் ஈடுபடுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டது. கொஞ்ச நாட்களில் பழுதாகிவிட்டதாகக் கரையொதுக்கி விடப்பட்டுள்ளது. விண்வெளியைக் கடந்து சந்திரனில் கால் பதித்து உலகமயம் என்றெல்லாம் பேசப்படும் இலங்கையில், ஒரு பாலத்தை அமைத்து மக்களின் துயர்துடைக்க யாரும் முயலவில்லை. அனைத்தும் பத்திரிகைகளிலும், வானொலி, தொலைக்காட்சிகளில் செய்தியாக வருகின்றன. நம்நாடு சுதந்திரம் பெற்று விட்டதா? என்ற வினாவோடுதான் இந்தப் பிரதேச மக்கள் வாழுகிறார்கள். சோமசுந்தரன் மனம் மக்கள் துயர்கண்டு கனத்தது.
ஒரு படகுப்பாதை இக்கரையில் இருந்து புறப்படும். அதேநேரம் அக்கரையிலிருந்து மற்றப் படகுப்பாதை இக்கரையை நோக்கி வரும். இரண்டும் நடு ஆற்றில் சந்திக்கும். அக்கரையில் இருந்து படகுப்பாதை வந்து கொண்டிருந்தது. சோமசுந்தரனின் கண்கள் படகுப் பாதையைத் துளாவின. 'அதோ அதிபர்.' செல்வன் சுட்டிக்காட்டினான். கந்தவனத்தாரின் உருவம் தெரிந்தது. சோமசுந்தரன் கண்டு கொண்டான். அவர்களது இதயம் அடித்துக் கொண்டது. எப்படி அவரிடம் கூறுவது. சங்கடமான நிலையில் தவித்தனர். படகுப் பாதை 'டாங்' என்ற ஒலியோடு கரையில் மோதி நின்றது. எவ்வளவு காலமாக இந்தப் படகுப் பாதையில் பணிபுரிகிறார்கள். சரியாகக் கரையில் சேர்ப்பதில்லை. மக்கள் முட்டி மோதிக் கொண்டுதான் ஏறியிறங்க வேண்டும். அதிபர் கந்தவனத்தார் மட்டும்தான் வந்திருந்தார்.
அவரை சோமசுந்தரன் உற்றுப்பார்த்தான். இவருக்கு அறுபத்தெட்டு வயதா? அவனது கண்ணே பட்டுவிடும் போலிருந்தது. தலையில் வழுக்கை முழுநிலாவாகப் பிரகாசித்தது. சாடையான வழுக்கை எங்கும் வியாபித்திருந்தது. உள்ள தலைமுடியும் வெண்மையாக மாறத் துடித்து நின்றன. துடிப்புள்ள இளைஞனைப் போல் அட்டகாசமான சிரிப்போடு இறங்கி நடந்து வந்தார். அவரைப் பலருக்குத் தெரியும். அவருக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது. ஒருகையில் அன்றையத் தினசரியும் சிறியதொரு பையும் இருந்தன. மறுகையில் குடை இருந்தது. அவரது கண்கள் பேருந்தைத் தேடின. அவரைத் தேடி சோமசுந்தரன் கால்கள் நடந்தன. செல்வன் பின் தொடர்ந்தான். அவர்களை அவர் கவனிக்க வில்லை. ஊருக்குப் போகும் பேருந்து அங்கு இல்லை. அதனைத் தேடினார். அவரது கண்கள் பேருந்தைத் தேடும் படலத்தில் இறங்கின. 'ஐயா.. ' குரல் கேட்டுத் திரும்பினார். அங்கே சோமசுந்தரனும் செல்வனும் காட்சி கொடுத்தார்கள். அவர்களைப் பார்த்ததும் அந்த வசீகரமான புன்னகையை வீசினார். பதிலுக்கு அவர்களது முகத்தில் சிரிப்பு வர மறுத்தது.
'என்ன சுந்தரா.. சுகமா? செல்வா எப்படி சுகம்? எங்க போறியள்?' ஒன்றும் அறியாதவர்போல் கலகலப்போடு உரையாடினார். 'சும்மா துறையடிக்கு வந்தோம். வீட்டுக்குத்தான் போகிறோம். உங்களைக் கண்டதும் சந்தோசப் பட்டோம். வாருங்கள் சைக்கிளில் போவோம்.' அன்போடு அழைத்தார்கள். 'சைக்கிள் சவாரி சுகமானதுதான். நீங்கள் இருவரும் ஒரு சைக்கிளில் வாருங்கள். நான் மற்றச் சைக்கிளில் வாறன்.' அந்த வசீகரச் சிரிப்போடு கூறினார். அவரது பொருட்களைப் பெற்றுக் கொண்டனர். கந்தவனத்தார் உற்சாகத்தோடு சைக்கிளில் ஏறினார். பொத்தற் சேலைபோல் குன்றும் குழியுமாகப் பழய மட்டக்களப்பு திருகோணமலை வீதி படுத்திருந்தது. கந்தவனத்தரின் சைக்கிள் குதிரையோட்டம் காட்டியது. பள்ளத்தில் விழும்போதும் எழும்போதும் சைக்கிள் ஒரு துள்ளுத் துள்ளும். அந்தத் துள்ளலில் அவரையும் துள்ளச் செய்யும். அவரது உடல் குலுங்கி அடங்கும். சோமசுந்தரனுக்குச் சிரிப்பு வந்தது. செல்வன் சிரிப்பையே மறந்து விட்டான். கந்தவனத்தாரும், கந்தையரும் ஆசிரியர்களாக இருக்கும் போதும், அதிபர்களாக இருக்கும் போதும், நகைச்சுவையோடுதான் கற்பிப்பார்கள். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்பார்கள். அதனால் மாணவர்கள் அவர்களது கற்பித்தலைப் பாராட்டினார்கள். அவர்கள் காலத்தில் கட்டொழுங்கு இருந்தது. சமய எழுச்சி இருந்தது எந்தப் பிள்ளைகளையும் ரியூசனுக்கு விடமாட்டார்கள். இலகுவான முறைகளைக் கையாண்டு கற்பிப்பார்கள். அவர்களது சேவைத் திறனால் கிராமப்புற மாணவர்கள் பலர் பல்கலைக் கழகம் சென்று பட்டதாரியானார்கள். இவர்களை எங்கள் தலைமுறையினர் தூற்றுவதா? செல்வனின் உள்ளம் கொதித்தது.
எப்படி அவரிடம் எடுத்துரைப்பது.? யோசனையோடு சைக்கிள் ஓட்டினார்கள். சற்று நேரம் மயான அமைதி நிலவியது. என்ன சத்தமில்லாமல் வாறியள்? என்ன புதினம். சொல்லுங்கோ? புன்னகையோடு கேட்டார். அவரது சைக்கிள் ஒரு பள்ளத்தில் ஏறிக் குதித்து நின்றது. விழாமலிருக்கத் தன் இடது காலை நிலத்தில் ஊன்றிக் கொண்டார். சோமசுந்தரனும் சைக்கிளை நிறுத்திக் கொண்டான். சைக்கிளை விட்டு இறங்கினார்கள். மெதுவாகச் சைக்கிளை உருட்டி நடந்தார்கள். 'ஐயா நமது ஊர் இப்ப கெட்டுப் போச்சுது. மனிதர்களை மதிக்கத் தெரியாத சமூகம் உருவாகி விட்டதுபோல் தெரிகிறது.' செல்வன் விடயத்தை உடைக்க ஆயத்தமாகி விட்டான். 'ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?' அவர்களைப் பார்த்துக் கேட்டார். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்தார்கள். மனந்துணிந்து கேட்டார்கள். 'ஐயா.. நமது ஊரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.?' 'நினைப்பது என்ன? 'எந்த ஊர் என்றாலும் அது நம்ம ஊர் போலாகுமா'?' பாட்டாகவே பதிலளித்தார். அவரது வெள்ளை உள்ளத்தைக் கண்டு மனம் பூரித்தாலும் அதற்காக அவர்கள் வருந்தினார்கள்.
'தம்பி; உங்களது ஏக்கம் எனக்குப் புரிகிறது? இதுதானே உங்களுக்கு வேணும்? கேள்வியோடு சட்டைப் பையிலிருந்த தாளை எடுத்து விரித்தார். இதைச் சொல்லத்தானே தயக்கம்'. சிரித்தவாறே காட்டினார். அசிங்கமான படங்களோடு 'ஏன் வந்தாய்? என்ற வினா தெரிந்தது. அவர்கள் சிலையானார்கள். இவருக்கு எப்படி இது கிடைத்தது?. 'ஐயா.. உங்களுக்கு.. இந்த விசயம் .. தெரியுமா?' ஆச்சரியத்துடன் வினாவினார்கள். 'தெரியுமாவா? என்னைத் தெரிந்த அத்தனைபேரிடமும் இந்தத் தாள் உலா வந்துள்ளது. தம்பி நான் உலகத்தைப் புரிந்தவன். பலரது உள்ளங்களையும் அறிந்தவன். ஏன் வந்தாய்? என்று கேட்பவர்களுக்கு நாங்கள் ஊருக்கு வந்ததன் நோக்கம் நல்லாகவே தெரியும். ஏதோ பயத்தினால் சேற்றை அள்ளித் தங்கள் முகத்திலேயே பூசியுள்ளார்கள். பாவம். அவர்களை மன்னிப்போம். இதைப் போட்டு அலட்டிக் கொள்ள வேண்டாம்.' அலட்சியப் படாமல் சொல்லிக் கொண்டு நடந்தார். 'எப்படி ஐயா பொறுத்துக் கொள்ளலாம். இதற்குப் பொறுப்பானவர்களும் உங்கள் இருவரிடமும் கற்றவர்கள்தானே?' நடந்தவாறே கேட்டார்கள்.
'கற்றவர்கள்தான். எல்லோரும் நல்லவர்கள்தான். ஆனாலும் மாணவர்கள் பலவிதம். நீங்கள் நன்னூலைப் படித்தவர்கள்தானே?. மாணவர்களை நன்னூலார் மூவகைப் படுத்துவார். அல்லவா? அவர்களை அன்னத்துக்கும், கிளிப்பிள்ளைக்கும், ஓட்டைக்குடத்துக்கும், பசுவுக்கும், பன்னாடைக்கும் இன்னும் பலவற்றுக்கும் ஒப்பிடுவார். பன்னாடை போன்றவர்கள் நல்லனவற்றை விட்டு விடுவார்கள். அல்லனவற்றை எடுத்துக் கொள்வார்கள். பன்னாடை போன்றவர்கள் நமது ஊரில் மட்டுமல்ல எங்கும் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களை நினைக்கும்போது கவலை கொள்கிறேன். அவர்களது மனம் அவர்களைச் சுட்டெரிக்கும். இப்போது அவர்கள் சிந்திக்காது எதனைச் செய்கிறார்களோ அதனை அவர்களுக்கு மற்றவர்கள் நிட்சயம் செய்வார்கள். பன்னாடை போன்றவர்களுக்குப் பாடம் புகட்டவே வந்துள்ளோம். ஊரையும் ஊர்மக்களையும் குறைகூறாதீர்கள். ஏறுங்கள் போவோம்.' கூறிக் கொண்டு சைக்கிளை மிதித்தார். அது ஊர்க்குருவி போல் பறந்தது. கந்தவனத்தரின் ஒவ்வொரு சொல்லும் செயலும் உறுதியாக இருந்ததை உணர்ந்து கொண்டார்கள். அவர்கள் மனதிலும் ஒரு அமைதி நிலைகொண்டது. ஆலங்கேணிக் கிராமத்தின் கிழக்கே கொட்டியாரக் குடாக்கடல் மட்டும் இரைந்து கொண்டிருந்தது. திரும்பிப் பார்த்தார்கள். கடல் பொங்கி எழுந்து துரத்துவதுபோல் தெரிந்தது. வழக்கத்துக்கு மாறாக அலைகள் ஆர்ப்பரித்து வந்தன. ஆழிப்பேரலைகள் ஊர்களை வாரி விழுங்கவேண்டும் என்று பாய்ந்தெழுந்து சீறியது.
யாவும் கற்பனை –

Monday, October 6, 2008

சகோதரராய் வாழ்வோம் (சிறுவருக்கான கருத்துப் பாடல்கள்)




ஆசிரியராக, அதிபராக, கல்வி அதிகாரி யாக கல்விப் பணிப்பாளராக பணிபுரிந்து அனுபவ முத்திரைபதித்த திரு. ச. அருளானந்தம் அவர்கள் இளம் பிஞ்சுகளின் உள்ளக் கிடக்கை களை நன்கு அறிந்தவர். அதன் காரணமாகச் சிறுவர் இலக்கியங்களைப் படைப்பதில் ஆர்வம் கொண்டு முழுமூச்சுடன் ஈடுபட்டார். “சிறுவர் இலக்கியத்தில் அவரது பணி தனித்து வமானது. அவரது மூன்று சிறுவர் இலக்கிய நூல்கள் சாகித்திய மண்டலப் பரிசில்களைப் பெற்றுள்ளன. கலாபூஷணம் விருதினைப் பெற்றுள்ள திரு. ச. அருளானந்தம் இதுவரை மூன்று சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். மேலும் ஐந்து சிறுவர் நாவல்களையும் வெளியிட்டுள்ளார். ‘பயங்கொள்ளலாகாது பாப்பா’ சிறுவர் நாவல் அகில இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.


சிறுவர்களுக்கான கதைகளையும், எட்டு சிறுவர் பாடல் நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவற்றுள் ‘காகமும் தம்பியும்’ ‘மனதுக்கினிய பாட்டு’ மாநில சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றுள்ளன. இவரது சிறுவர் பாடல் நூல்கள் தனித்துவமானவை. அருமையானவை., சின்னச் சின்ன சொற்கள், அந்தச் சொற்களின் துடிப்பு, துடிப்பிலே துள்ளிவரும் சத்தம், அந்தச் சத்தத்தின் இனிமையிலே துள்ளுகின்ற கருத்துக்கள், படிப்பினை ஆகியவற்றை இவர்களது பாடல்களில் காணலாம் என்று அறிமுக உரையில் திரு. க. தங்கராஜா தெளிவுபடுத்தி யுள்ளார். ‘சகோதரராய் வாழ்வோம்’ என்ற மகுடத்தில் இன ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் வகையிலும் மற்றும் பல்துறை சார்ந்த விடயங் களையும் உள்ளடக்கி சிறுவருக்கான கருத்துப் பாடல்களைக் கொண்ட நூலாக இத் தொகுதியை யாத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். இந்நூலில் 94 பாடல்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருத்தினைக் கூறியிருப் பதை அவதானிக்க முடிகின்றது. பாடுவோமே! பாட்டுப் பாடுவோமே! என்று சிறுவர்கள் ஆடிப் பாடி மகிழ்ந்து நிற்கக் கூடிய வகையில் பாடல்கள் அமைந்துள்ளன. ஓசை நயம், சந்தம் கையாளப் பட்டிருக்கும் அழகு மனத்தில் ஒரு உற்சாகக் கிளர்ச்சியை ஏற்படுத்தி யிருப்பதை அவதானிக்க முடிகின்றது. அந்த வகையில் தன்மனத் தேட்டத்தை வெளிக்கொணர்ந்து வெற்றியும் கண்டுள்ளார் ஆசிரியர்.


“கிராமத்திலே பிறந்து, கிராமியக் காற்றினைச் சுவாசித்துத் தான் கண்டு கொண்ட, அனுபவித்த அத்தனை விடயங்களை யும், காட்சிகளையும் உள்வாங்கிப் பல சிறுவர் இலக்கியங்களைப் படைத்துள்ளார். ‘சகோதரராய் வாழ்வோம்” என்ற இந்த நூலில் பொதிந்துள்ள விடயங்கள் பொருள் நிறைந்தனவையாகவும், விளக்க பூர்வமானவையாகவும் விளங்கு கின்றன. நமது சிறுவர்களுக்குத் தெரிந்திராத பல விடயங்களை இந்த நூலில் காட்டியிருப்பதும், சிறுவர்களது சிந்தனையைத் தூண்டுவன வாகவும் அமைந்துள்ளமை பாராட்டிற்குரியது.” என்று தனது அணிந்துரையில் திருகோண மலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி சந்திரா பாலசுப்பிரமணியம் கூறிய கூற்றுக்கள் மனங்கொள்ளத்தக்கன. “சிறுவர்களது உள்ளத்தில் அன்பும், அறமும், இரக்க சுபாவமும், நேர்மையும் துளிர் விடும் கருத்துக்களோடு மனித நேயத்தை வலியுறுத்தும் கருக்களும் முளைவிட்டு மலர வேண்டும். அதற்கேற்றவாறு சிறுவர் இலக்கி யங்கள் பல்கிப் பெருக வேண்டும். எனது பாடல் களும், ஏனைய சிறுவர் கதைகளும், சிறுவர் நாவல்களும் இவற்றின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன என்கின்றார் நூலாசிரியர்.பிள்ளைகள் வளர்கின்ற சூழல், பெற் றோர்களின் கவனிப்பின்மை, வறுமை, கல்வி கற்றலுக்கான வசதியின்மை போன்ற இன்னோ ரன்ன காரணங்களால் இன்றைய சமுதாயச் சிறார்கள் சீரழிந்து கொண்டிருக்கின்ற இக்கால கட்டத்தில் இத்தகைய சிறுவர் இலக்கியங்கள் கீழ்மட்டச் சிறார்களைச் சென்றடைய வழி சமைக்க வேண்டியது நமது கடமையாகக் கொள்ளும்போதுதான் நூலாசிரியரின் ஆதங்கம் நிறைவேறும்.


“ஒற்றுமை நமக்குள் வரவேண்டும் - நாம் உறவும் உரிமையும் பெறவேண்டும்மற்றவர் போற்ற இலங்கையராய் - இங்குமகிழ்ந்து வாழ்வோம் சகோதரராய் .என்ற பாடல் வரிகள் வேண்டப்படும் யதார்த்தமான உண்மையை வெளிக் கொணர்ந்துள்ளது. ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் - இந்த உலகில் பெருமை பெறலாம்என்று சொல்லும் பெரியோர் - இங்குஇணைந்து வாழும் குடும்பம்இன்றைய சமுதாயம் வயோதிபர்களை ஒதுக்கி வைத்து, அவர்களால் குடும்பத்தில் பெரும் சுமை என்று எண்ணிக் கொண்டி ருக்கின்ற காலகட்டத்தில் ‘இணைந்து வாழும் குடும்பம்’ என்ற பதம் சிறுவர் மனங்களில் புகுத்தப்படுவது முக்கியமானதாகும். நல்ல சிறுவர் இலக்கியங்களைப் படைத்துக் கொண்டி ருக்கின்ற நூலாசிரியரின் பணி தொடரட்டும்.-

த. சிவா